உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவருக்கு சீனா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
உளவு பார்த்த குற்றச்சாட்டு வழக்கில் கனேடிய தொழிலதிபர் Michael Spavorருக்கு சீன நீதிமன்றம் புதன்கிழமை11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தொழில்நுட்ப நிறுவனமான Huaweiயின் நிர்வாகி கனடாவில் கைது செய்யப்பட்டதற்கு கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக சீனாவின் அழுத்த பிரச்சாரமாக இது நோக்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் Justin Trudeau விமர்சித்தார்.
இந்தத் தீர்ப்பு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது, சட்ட நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் சர்வதேச சட்டத்தால் தேவைப்படும் குறைந்தபட்ச தரநிலைகளை கூட பூர்த்தி செய்யாத ஒரு விசாரணைக்குப் பின்னர் வெளியானது என பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தண்டனை குறித்து கனேடிய வெளியுறவு அமைச்சரும் Marc Garneau தனது கண்டனத்தை தெரிவித்தார்.
சீனாவில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை விடுவிக்க கனடா தொடர்ந்து போராடும் என அமைச்சர் உறுதியளித்தார்.
சீனாவில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை விடுவிக்க அழைப்பு விடுத்த ஏனைய நாடுகளுக்கு அமைச்சர் Garneau நன்றியும் தெரிவித்தார்.
இந்த வழக்கின் சட்ட செயல்முறை நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இரண்டையும் கொண்டிருக்கவில்லை என சீனாவுக்கான கனேடிய தூதுவர் Dominic Barton தண்டனை அறிவிக்கப்பட்ட தடுப்பு மையத்திற்கு வெளியே தெரிவித்தார்.
அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், அவுஸ்ரேலியா, ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் Beijingகில் உள்ள கனேடிய தூதரகத்தில் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் கூடினர்.
ஈரான் மீதான வர்த்தக தடைகளை மீறியது தொடர்பாக அமெரிக்க குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள Huaweiயின் நிர்வாகி Meng Wanzhouவை ஒப்படைப்பது குறித்து அடுத்த சில வாரங்களில் கனேடிய நீதிமன்றில் இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
Spavorவும் மற்றொரு கனேடியரும் தொடர்ந்தும் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மற்றொரு சீன நீதிமன்றம் மூன்றாவது கனேடியரின் மேல்முறையீட்டை நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.