British Colombia மாகாணத்தில் மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நிலக் குறிப்புகள் இல்லாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Vancouver தீவுக்கு அருகே உள்ள Penelakut தீவில் உள்ள வதிவிடப் பாடசாலைக்கு அருகில் 160க்கும் மேற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு Penelakut முதற்குடியினரால் விநியோகிக்கப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில் வெளியானது. இந்த வதிவிடப் பாடசாலை 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த தீவில் சிக்கி முதற்குடியின குழந்தைகள் பாடசாலை ஊழியர்களின் கொடூரமான உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டனர். இந்தப் பாடசாலையில் மொத்தம் 121 குழந்தைகள் இறந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் சில குழந்தைகள் இந்த தீவில் இருந்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கினர்.
கனடாவில் முன்னாள் வதிவிடப் பாடசாலைகள் அமைந்திருந்த பகுதிகளில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான இதேபோன்ற நிலக் குறிப்புகள் அற்ற கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பு முன்னாள் வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு வலியை ஆழப்படுத்துகிறது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த கண்டுபிடிப்புகள் குடும்பங்கள், தப்பி பிழைத்தவர்கள், அனைத்து முதற்குடியின மக்கள் மற்றும் சமூகங்கள் ஏற்கனவே உணரும் வேதனையை ஆழமாக்குகின்றன என்பதை தான் உணர்வதாக பிரதமர் கூறினார்.
இந்த நிலையில் உண்மையான, உறுதியான நடவடிக்கைகளுடன் பாகுபாடு மற்றும் முறையான இனவெறிக்கு எதிராக போராடுவதற்கு தனது அரசாங்கம் முதற்குடி சமூகங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்ற தனது உறுதிப்பாட்டை பிரதமர் Trudeau மீண்டும் வலுப்படுத்தினார்.