September 19, 2024
தேசியம்
கட்டுரைகள்

கனேடிய முதற்குடிகள் மீதான இனப் படுகொலையும்,பண்பாட்டு படுகொலையும்!

அபிவிருத்தியடைந்த நாடுகளின் ஏதேனுமொரு மூலையில் மிகக் குறைவாகவும், வட
அமெரிக்காவில் மிக அரிதாகவும் காணக்கிடைத்ததைப் போல், கனடாவின் British Colombiaமாகாணத்தின் Kamloops நகருக்கு அருகில் ஒரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.


பெயர்கள் குறிப்பிடப்படாத, முன்னதாகக் கைவிடப்பட்ட, Kamloops முன்னாள் வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த சிறுவர்களின் கல்லறைகள் தான் அவை. முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 215 குழந்தைகளின் எலும்புக்கூடு எச்சங்கள் May மாத இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களில் மூன்று வயதிற்கும் கீழான குழந்தைகளின் உடல்களும் அடங்குகின்றன. கனடா முழுவதும் உள்ள, பல முதற்குடியின
சமூகத்தில் இருந்து, குழந்தைகள் அந்தப் பாடசாலைகளுக்கு அழைத்து செல்லப்பட்டிக்கிறார்கள்.


இவ்வாறு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் இன அழிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது.


இதனை கனேடிய முதற்குடிகள் மீதான இனப்படுகொலையாகவும் பண்பாட்டு
படுகொலையாகவும் வகைப்படுத்தலாம். Tk’emlups te Secwepemc First Nationஇன் தலைவர் Rosanne Casimir, ஒரு அறிக்கையில் தரையை ஊடுருவி (தரைக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும்) radar கொண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் 215 கல்லறைகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்ததாகக் கூறினார். “கனேடிய வரலாற்றின் மிக இருண்டபக்கங்கள் திறக்கப்படுள்ளது” என இந்தக் கண்டுபிடிப்பின் பின்னர் பிரதமர் Justin Trudeau கூறினார்.


வதிவிடப் பாடசாலைகளில் இத்தனை சிறுவர்கள் இறந்தது ஏன்?
1893ஆம் ஆண்டில் Kamloopsஇல் திறக்கப்பட்ட இந்த முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ஒரு காலத்தில் கனடாவில் மிகப்பெரிய வதிவிடப் பாடசாலையாக இருந்தது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மையம் (National Centre for Truth and
Reconciliation) இந்தப் பாடசாலையில் 51 சிறுவர்கள் இறந்திருப்பதாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது. எனினும், முன்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதை தற்போது radar மூலமான கணக்கெடுப்பு காட்டுகிறது.


“கண்டுபிடிக்கப்பட்டவை முதற்குடி மக்களுடைய சடலங்கள் தான்” என Casimir
உறுதிபடுத்தியுள்ளார். இந்த இழப்பு நினைத்துப் பார்க்க முடியாதவொன்று என Casimir கூறினாலும் Kamloops முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலையில் ஒருபோதும் இது
ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இறந்த 215 சிறுவர்கள்
தொடர்பான பதிவுகளை Royal BC அருங்காட்சியகத்துடன் (Royal BC Museum) இணைந்து தாம் தேட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


18ஆம் நூற்றாண்டின் நிறைவில், கனடாவின் முதற்குடியின சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, கத்தோலிக்க தேவாலயங்களால் இயக்கப்பட்ட, வதிவிடப்

பாடசாலைகளில் இணைக்கப்பட்டனர். அங்கு அவர்கள், தமது முதற்குடியின மொழிகளை பேசுவது, கலாச்சாரத்தை பின்பற்றுவது போன்றவை தடுக்கப்பட்டதுடன், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1969ஆம் ஆண்டுவரை, கத்தோலிக்க தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த குறித்த பாடசாலைகள், அதன் பின்னர் கனடிய அரசால் பொறுப்பேற்கப்பட்டு, 1978ஆம் ஆண்டு மூடப்பட்டன.
Upper Nicola Bandஇன் தலைவர் Harvey McLeod குழந்தையாகவிருந்த போது முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலையில் பயின்றார். “கூடப்படித்தவர்கள் காணாமற்போனபோது மீண்டும் அதைப் பற்றி எவரும் ஒருபோதும் பேசவில்லை. ஒரு நாள் அவர்கள் இங்கே இருந்தார்கள், மறு நாள் அவர்கள் போய்விட்டார்கள் என்பது மட்டுமே என் நினைவில் உள்ளது,”
என அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.


கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மைய குழுவின் 2015ஆம் ஆண்டு அறிக்கையின் படி, கனடாவின் முதற்குடியினர் அனைவரையும் மதம் மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற வதிவிடப் பாடசாலைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுள் 6,000க்கும் மேற்பட்டோர் பண்பாட்டு இனப்படுகொலை செய்யப்பட்டனர். இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை. முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு
எண்ணிக்கையை கூற இயலாது நிலை உள்ளது. 1890ஆம் ஆண்டுமுதல் 1978ஆம் ஆண்டுவரை செயல்பட்ட இந்தப் பாடசாலையில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்ககூடும் என கூறப்படுகிறது.

1990ஆம் ஆண்டுகளில் தான் கனடாவில் இது போன்ற பாடசாலைகள்
மூடப்பட்டன. முன்னாள் வதிவிடப் பாடசாலையில் இறந்த முதற்குடியின குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான முயற்சிதான், ஏழு ஆண்டுகள் பணியாற்றிய கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மிகவும் வேதனையான பணிகளில் ஒன்றாக இருந்தது.

குறைந்தது 3200 சிறுவர்கள் வதிவிடப் பாடசாலையில் மாணவராக இருந்த போது இறந்திருப்பதாக இறுதியில் ஆணைக்குழு தீர்மானித்தது. கிட்டத்தட்ட 120 ஆண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு 50 மாணவர்களில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்கள். இது இரண்டாம் உலகப் போரின் போது Nazi ஜெர்மனியின் காவலில் இறந்த கனேடிய போர்க் கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடக்கூடிய இறப்பு வீதமாகும். இதன் விளைவாக, கனடாவின் மிகவும் மோசமான பல வதிவிடப் பாடசாலைகள் பெயர் குறிக்கப்படாத குழந்தைகளின் புதைகுழிகளின் பரந்த கல்லறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன.


Saskatchewanனில் உள்ள Battleford தொழில்துறை பாடசாலையில் (Industrial School) 72
கல்லறைகள் 1970களில் தொல்பொருள் மாணவர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை மறக்கப்பட்டிருந்தன. 2001இல் Albertaவின் High River பகுதிக்கு அருகில் பெய்த கடும் மழை, அருகிலிருந்த Dunbow வதிவிடப் பாடசாலையில் இறந்த 34 சிறுவர்களின் புதைகுழிகளை அம்பலப்படுத்தியது. 2019 இல் தரையை ஊடுருவும் radarரைப் பயன்படுத்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த போது, Saskatchewanனின் Muskowekwan வதிவிடப் பாடசாலையின் முந்தைய அமைவிடத்தை சுற்றியுள்ள பகுதியில் 15 சிறுவர்களின் புதைகுழிகளை கண்டுபிடித்தனர். உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மையத்தால் பராமரிக்கப்படும்

நினைவு பதிவேட்டில் 2,800க்கும் மேற்பட்ட பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி Murray Sinclair, உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை 6,000 ஆக இருக்கலாம் என கூறியுள்ளார்.
ஆனால், இறப்பு பதிவுகள் எப்போதாவது பதியப்பட்டிருந்தாலும் கூட, பெரும்பாலும் அவற்றில் அடிப்படையான தனிப்பட்ட தகவல்கள் கூட இல்லை என்பதால், உண்மையான எண்ணிக்கை ஒருபோதும் தெரியவராது. “பல சந்தர்ப்பங்களில், பாடசாலை அதிபர்கள் பாடசாலையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைப் பற்றி சிறியளவிலான துணை விபரங்களுடன் அல்லது துணை விபரங்கள் எவையுமின்றி வெறுமனே அறிக்கை செய்துள்ளனர்,” என உண்மை மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வதிவிடப் பாடசாலையில் இறந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினரின் பெயர்கள் பாடசாலை நிர்வாகத்தால் பதியப்பட்டிருக்கவில்லை. கால்வாசிப் பேரின் பாலினம் கூட குறிப்பிடப்படாமல் இறந்தவர்கள் என பதியப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ நினைவு பதிவேட்டில் உள்ள 2,800 பெயர்களில், “Alice,” “McKay” அல்லது “Elsie”” என்று மட்டுமே பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அறியப்பட்ட குழந்தைகள் உள்ளனர்.


சிறுவர்களின் உடல்கள் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், அவர்கள் எந்த சூழ்நிலையில் உயிரிழந்தார்கள் என்பதை பெற்றோர்கள் மிக அரிதாகவே தெரிந்து கொண்டுள்ளனர். பெரும்பாலும் குழந்தையின் பெயரை அவரது சொந்தச் சமுதாயத்தில் உள்ள முதற்குடி முகவருக்கு அனுப்புவது மட்டுமே மரண அறிவித்தலாக இருந்துள்ளது.


“வதிவிடப் பாடசாலைக்கு சென்ற தமது பிள்ளைக்கு என்ன நடந்ததென குடும்பத்தார்
அறிந்திருக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாகவுள்ளது” என Ontarioவின் துர் மரணம் அடைந்தவரின் பிரேத விசாரணை நடத்தும் தலைவரான (Ontario Chief Coroner) Andrew McCallum, 2012இல் அவரது அலுவலகம் வதிவிடப் பாடசாலைகளில் இடம்பெற்ற பதிவு செய்யப்படாத இறப்புகள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த போது தெரிவித்திருந்தார்.


“மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தவிர்த்து வதிவிடப் பாடசாலைகளில் இறந்த முதற்குடியின குழந்தைகளின் உடல்களை புகையிரதம் மூலம் மீண்டும் குடும்பத்தினருக்கு அனுப்புவது திணைக்களத்தின் நடைமுறையில்லை” என்று முதற்குடியினரின் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் (Department of Indian Affairs) பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திணைக்களம் அங்கீகரிக்கும் அளவிற்கு மிக முக்கியமான செலவாக இதனைக் கருதவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பிற்கு காரணமான நோய்களில்
முக்கியமானதாக காசநோய் (tuberculosis) குறிப்பிடப்பட்டுள்ளது. நெருக்கமான சூழ்நிலை, கவனக்குறைவான சுகாதார நடைமுறை என்பவற்றால் வதிவிடப் பாடசாலைகள் காசநோய் பரவக்கூடிய இடங்களாக இருந்தன.
முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு 1870ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி மிகவும் கொடியதாக இருந்துள்ளது. Qu’Appelle முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலை (Qu’Appelle Indian Residential School) 1884ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து முதல் 6 வருடங்களில் அதன் மாணவர்களில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். தெற்கு Albertaவில் உள்ள Sacred Heart வதிவிடப்

பாடசாலையில் ஒவ்வொரு ஆண்டும் 20 மாணவர்களுக்கு ஒருவர் எனும் அடிப்படையில் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. ஆனால் அவ்வப்போது சீர்திருத்த முயற்சிகள் இருந்தபோதிலும், 1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட வதிவிடப் பாடசாலைகளில் இறப்பு விகிதம் கனேடிய குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்துள்ளது.


வதிவிடப் பாடசாலைகள் குறித்து அதிகாரிகளும் நன்கு அறிந்திருந்தனர். British Colombia வின் Chemainus அருகில் இருந்த Kuper Island வதிவிடப் பாடசாலை 1889ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து அந்த பாடசாலையின் மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழந்துள்ளனர். “பல உயிரிழப்புகள் காரணமாக இந்த பாடசாலையை முதற்குடியினரின் புறக்கணிக்க முனைகிறார்கள்,” என 1922இல் பாடசாலை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் அடிப்படையான மருத்துவ வசதிகள் கூட இல்லாமை இறப்பு விகிதத்தை
அதிகரித்துள்ளது. அதிகாரிகளால் வெளியில் தெரியாமல் அகற்றப்படும் வரை, கூடப்
படிப்பவர்கள் காசநோய் பற்றி பெரிதும் அக்கறையற்றிருந்தனர் என தப்பிப் பிழைத்தவர்கள் விபரித்துள்ளனர். கனேடிய Senate சபைக்கு பின்னாளில் நியமிக்கப்பட்ட முதலாவது முதற்குடியினரான James Gladstone, தனது நினைவுக் குறிப்புகளில், ஆணியில் கால் வைத்து காயப்பட்ட தனது சக மாணவருக்கு மருத்துவ உதவியை வழங்கத் தவறியதால், அம்மாணவர் இறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “Joeவை அவர் உயிரிழக்கும் வரை இரண்டு நாட்கள் கவனித்துக்
கொண்டேன். அவர் இறக்கும் தறுவாயில், நான் மட்டுமே அவரை கவனித்துக் கொண்டேன்,” என Gladstone குறிப்பிட்டார்.


முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகள் பெரிய கொலையாளியாக இருந்துள்ளன. தீ விபத்துகளின் போது தப்பிக்கும் வகையிலான கட்டுமானங்கள் இல்லாமை, அடிப்படை பாதுகாப்புத் தரங்கள் இன்மை என்பன காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் படியான விபத்துகள் அடிக்கடி வதிவிடப் பாடசாலைகளில் நிகழ்ந்தன. வேறு எந்த சூழலிலும் இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்திருக்கும். Saskatchewanனின் Beauval
முதற்குடியினரின் பாடசாலையில் 1927இல் ஏற்பட்ட தீ விபத்தில் 19 மாணவர்கள்
கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு 3 ஆண்டுகள் கழித்து Manitobaவில் உள்ள Cross Lake வதிவிடப் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.


அவ்வாறிருந்த போதிலும், “அவர்களின் வரலாற்றின் பெரும்பகுதியில், தீ விபத்து தொடர்பான விதிமுறைகளை மீறியே முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகள் இயங்கியுள்ளன,” என உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையகத்தின் இறுதி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.


சிறுவர்கள் தப்பித்து ஓட முயன்ற போது உறைந்து போனார்கள் (froze) அல்லது நீரில் மூழ்கி (drowned) இறந்து போனார்கள் என்பது தான் அநேகமாக வதிவிடப் பாடசாலைகளில் இடம்பெறும் இறப்புகளுக்கு காரணமாக சொல்லப்படும். இவ்வாறான முறையில் பல சிறுவர்கள் இறந்திருப்பார்கள். பாடசாலைகள் அவர்களை கண்டுபிடிக்க எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை என்பதுடன், பல நாட்களாக அவர்கள் காணாமற்போனதைக் கூட முறைப்பாடு செய்யத் தவறிவிட்டன.
குறிப்பாக 1937ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

7 முதல் 9 வயது வரையிலான நான்கு சிறுவர்கள் 7 mile தொலைவில் உள்ள Naldeh Reserveபகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணையும் எதிர்பார்ப்புடன் Fraser Lake முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலையில் இருந்து ஓடியுள்ளனர். சிறுவர்கள் 24 மணித்தியாலங்களுக்கு மேல் காணாமற்போயிருந்த போதும் அவர்களை தேடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து பாடசாலை அக்கறை காட்டவில்லை. பின்னர் அவர்களைத் தேடிய போது, வீட்டிலிருந்து சிறிய தூரத்தில் சிறுவர்கள் நால்வரும் உறைந்து போய் இறந்து கிடந்ததைக் கண்டார்கள்.


தற்போது Kamloops வதிவிடப் பாடசாலையில் சிறுவர்களின் எச்சங்கள்
கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முதற்குடி மக்கள் மீதான வன்முறைகளுக்கு அப்பட்டமான
உதாரணமாகும்.


இதுபோன்ற இனப்படுகொலையும் பண்பாட்டு படுகொலையும் கனடா மட்டும் இன்றி உலகின் பல அரசுகளும் முதற்குடியின மக்கள் மீது முன்னெடுப்பது வரலாறாகியுள்ளது. கனடாவின் முதற்குடியினர் மீது மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையும் பண்பாட்டு படுகொலையும் குறித்துக் கிடைத்திருக்கும் புதிய ஆதாரம் இதுவாகும். “இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் இரத்தத்தினையும் கனேடிய முதற்குடிகள் மீதான இனப் படுகொலையையும் பண்பாட்டு படுகொலையையும் இவை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன”

இலங்கதாஸ் பத்மநாதன்

(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பின் முகப்பு கட்டுரை)

Related posts

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

Lankathas Pathmanathan

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan

Paris Paralympics: இருபத்து ஒன்பது பதக்கங்களை வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment