Ontario மாகாணத்தின் வரவு செலவு திட்டம் நேற்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. COVID தொற்று காலத்தில் மாகாணத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் Peter Bethlenfalvy சமர்ப்பித்தார். Doug Ford அரசாங்கம் அதிகரித்த சுகாதார செலவினங்கள், வணிகங்களுக்கும் பெற்றோர்களுக்கும் மானியங்களுடன் இந்த வரவு செலவு திட்டத்தைநேற்று சமர்ப்பித்தது.
தொற்றிலிருந்து வெளியேறும் பாதையில் 100 பில்லியன் டொலருக்கு அதிகமான புதிய கடனுடனும் பற்றாக்குறையுடனும் இந்த வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவு திட்டத்தில் 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை 33.1 பில்லியன் டொலராக கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 38.5 பில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை 27.7 பில்லியன் டொலராகவும், 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை 20.2 பில்லியன் டொலராகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு Ontario மாகாணம் 186.1 பில்லியன் டொலரை செலவிடும் எனவும் இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் 2029 ஆம் ஆண்டு வரை Ontario மாகாணம் சமச்சீர் வரவு செலவுத் திட்டங்களுக்கு திரும்புவதை கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.