இலங்கை- கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்லத்துரையின் Funny Boy திரைப்படம் குறித்த வாதப் பிரதி வாதங்களை பலரும் அறிந்திருப்பீர்கள். ஷியாம் செல்வத் துரையின் நாவலைத் தழுவி, இந்திய – கனடிய இயக்குனர் தீபா மேத்தா இயக்கியது இந்தத் திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு ஷியாம் செல்வத்துரையும், தீபா மேத்தாவும் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதினர்.
Funny Boy நாவல் ஆங்கிலத்தில் வெளியானாலும் அது திரைப்படமாக தயாரிக் கப்பட்டபோது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளை உள்ளடக்கியதாக அமைந்தது. இலங்கையில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு தமிழ் தற்பாலின இளைஞனின் வாழ்வியலே Funny Boy என்ற நாவல்/திரைப்படம். 1974ஆம்ஆண்டு ஆரம்பமாகி, 1983ஆம் ஆண்டு வரையான காலத்தை களமாக கொண்டிருக்கும் இத்திரைப்படம், தமிழ் தற்பாலினம் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாட்டில் சிறுபான்மையின வாலிபன் ஒருவனின் உளப்போராட்டமாக அமையப் பெற்றுள்ளது.
Funny Boy திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னரே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.இவற்றில் பல திரைப்படத்தின் மொழி உபயோகம், தற்பாலின அடையாள மலினப்படுத்தல்,அரசியல் நிலைப்பாடு குறித்து பொது வெளியில் கேள்விகளை எழுப்பியிருந்தன.
இவ்வாறான விமர்சனங்கள் திரைப்பட வெளியீட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதில் இறுதியான பின்னடைவாக அமைந்தது – சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்கான பட்டியலில் இருந்து Funny Boy திரைப்படத்தை Oscar தகுதி நீக்கம் செய்துள்ளது என்ற செய்தியாகும்.
இந்த விடயத்தை ஒரு செய்தியாக மாத்திரம் கடந்து செல்ல முடியாது. இந்தத் திரைப்படத்தை அதன் வெளியீட்டின் முன்னரும் பின்னரும் பலர் ஆக்கபூர்வமாக விமர்சித்தனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகளாகவும், ஒலி/ஒளி ஊடக கருத்துப் பகிர்வுகளாகவும், செவ்விகளாகவும், திரை விமர்சனங்களாகவும் பல விமர்சனங்கள் வெளியாகின. பொது வெளியில் பலர் கருத்துரைத்திருந்தது Oscar எடுத்த இந்த முடிவின் பின்னணியில் இருந்திருக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றவர்கள் நடைமுறை யதார்த்தத்தை புரியாதவர்கள் – அல்லது அதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
பல வெளிகளிலும் இருந்து ஒருமித்த கருத்தாக விமர்சனம் முன்வைக் கப்படும்போது அது ஏற்படுத்தக்கூடிய மாற்றம்தான் Oscarரின் இந்த முடிவாகும். Funny Boy திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே PR (Public Relation) என்ற ரீதியில் முன்னைடுக்கப்பட்ட நகர்வுகள் பல. அவற்றில் ஒன்றாக அழைக்கப்பட்ட சிலருக்கு
திரைப்படத்தை முன்கூட்டியே திரையிட்டுக் காட்டும் ஒரு முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
திரைப்படம் குறித்த எதிர்மறைக் கருத்துக்களை முறியடிக்கும் முனைப்பாகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இது ஒருவகைப் பொறி.
அந்தப் பொறியில் வீழ்ந்தவர்கள் சிலர். அவர்கள் திரைப்படம் குறித்தும் இயக்குனர், எழுத்தாளர் குறித்தும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டது மாத்திரம்தான் இறுதியில் நடந்தது. இந்தப் பொறியில் வீழ்ந்து விடாமல் தம்மைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் சிலர். அவர்கள் திரைப்படத்தையும் அதனை சுற்றி பின்னப்பட்ட அரசியலையும் பொது வெளியில் விருப்பு வெறுப்பு இல்லாமல் விமர்சிக்கத் தவறவில்லை.
Funny Boy திரைப்படத்தில் இழைக்கப்பட்ட அடிப்படைத் தவறுகள் மூன்று. அவை தமிழ் மொழிப் பிரயோகம், வரலாற்றுத் திரிபு, தற்பாலின அடையாள மலினப்படுத்தல் என்பனவாகும்.
முழுமையாக ஆங்கிலத்தில் வெளியான நாவல், திரைப்படமானபோது ஏன் தமிழும் பேசியது என்ற கேள்விக்கான பதில் Oscar நியமனமாகும். தவிரவும் திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட தமிழ் குறித்த விமர்சனங்களுக்கு பின்னர் தமிழில் பேசப்படும் காட்சிகளில் மீள் குரற்பதிவுகள் இடம்பெற்றது. ஆனாலும் மீள் குரற்பதிவின் பின்னர் கூட திரைப்படத்தின் தமிழ் மொழிப் பிரயோகம் தொடர்பான விமர்சனங்கள் பலரிடமும் உள்ளன.
தமிழ் மொழிப் பிரயோகத்தை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளான விடயம் திரைப்படத்தின் வரலாற்றுத் திரிபாகும். Funny Boy திரைப்படம் முழுமையாக தமிழர் எதிர்ப்பு நிலைபாட்டை கொண்டிருந்தது. குறிப்பாக ஸ்ரீலங்காவின் 83 இனக்கலவரத்தின் முன்னரும் பின்னருமான கால கட்டத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் முழுமையாக தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை
தாங்கியிருந்தன. தமிழர் தரப்பு முழுமையான தவறிழைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர்.
தவிரவும், திரைப்படத்தில் தமிழ் தற்பாலினத்தவர்களின் அடையாளம் மலினப்படுத்தப்பட்டது குறித்து QTC எனப்படும் Queer Tamil Collective தனது குற்றச்சாட்டையும், கண்டனத்தையும் ஒரு மனுவாக முன்வைத்தது. பொது வெளியிலும் அது குறித்து விவாதித்தது. QTC முன்வைத்த குற்றச்
சாட்டில் பிரதானமானது நடிகர் தேர்வு குறித்ததாகும்.
Funny Boy திரைப்படம் குறித்த எதிர்ப்பு ஒரு சிலர் உயிர்ப்போடு வைத்திருக்க முனைந்த
போதிலும் சமூகமாக அதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக இந்த விடயத்தில் கனடாவில் இருந்து இயங்கும் தமிழர் சார் அமைப்புகளின் நிலைப்பாடும், ஏதிர்வினையும், செயலற்ற தன்மையும், மௌனமும் இலகுவில் கடந்துவிட முடியாதவை.
CTC, NCCT, TGTE என கனடாவில் தமிழர் சார்பாக இயங்கும் மூன்று அமைப்புகளும் இந்தத் திரைப்படம் முன்வைக்கும் வரலாற்றுத் திரிபு குறித்து ஏன் மௌனம் காக்கின்றன என்ற கேள்வி உள்ளது. தமிழர் அமைப்புகளில் திரைப்படத்திற்கு ஆதரவு அறிக்கை வெளியிட்டது CTC. அவர்களது அறிக்கை வெளியானபோது தமிழ் மொழிப் பிரயோகம் பெரும் விமர்சனமாக இருந்தது.
மீள் குரற்பதிவுகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனாலும் CTC அந்த விடயம் குறித்து
கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதேபோல் தரவுகளில் இருந்த வரலாற்றுத் திரிபுகளை எவ்வாறு CTC ஏற்றுக் கொண்டது என்ற கேள்வியும் உள்ளது. தனது இயக்குனர் குழு திரைப்படத்தை பார்வையிட்டு நற்சான்றிதல் வழங்கியதாகவும் CTC ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
Funny Boy போன்ற ஒரு தரவுகளின் தவறுகள் மலிந்திருந்த திரைப்படத்தை
எவ்வாறு தமிழர்களின் நலன்களில் அக்கறை கொள்வதாக கூறும் ஒரு அமைப்பு ஆதரித்து அறிக்கை வெளியிட்டது. இப்போது கள்ள மௌனம் காக்கும் CTC இந்த விடயத்தில் பல கேள்விகளுக்கு பதில் கூறவேண்டியுள்ளது. CTC தவிர NCCT, TGTE போன்ற அமைப்புக்கள் இந்த திரைப்படம் குறித்து பொது வெளியில் எதுவும் கூறவில்லை.
குறைந்தது தமிழர்கள் குறித்த வரலாற்றுத் திரிபுக்கு தமது எதிர்ப்பைக் கூட பதிவு செய்யவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. இவர்களது மௌனமும் கண்டிக்கப்பட வேண்டியது!
இலங்கதாஸ் பத்மநாதன்
(தேசியம் January 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை)