பெற்றோர் (parents), தாத்தா, பாட்டி (grandparents) ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான குலுக்கல் முறையிலான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க கனடிய மத்திய அரசு சர்ச்சைக்குரிய குலுக்கல் முறைக்குத் திரும்புகின்றது. COVID பெரும் தொற்றால் தாமதமடைந்த இந்தப் புதிய திட்டம் குறித்த விபரங்களை இன்று (05) கனடிய குடிவரவு அமைச்சர் Marco Mendicino அறிவித்தார். கனடாவுக்கு பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை அழைக்க விரும்பும் கனடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் இணையத்தில் படிவத்தை பூர்த்தி செய்யலாம் என இன்று அமைச்சர் Marco Mendicino கூறினார்.
கனடாவிற்கு தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை அழைத்து வருவதில் ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் படிவங்களை பூர்த்தி செய்யக்கூடிய மூன்று வார காலம் Ocotber மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்தக் காலத்தில் பின்னர், குடிவரவு, அகதிகள், குடியுரிமை அலுவலகம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 10 ஆயிரம் பேரை தெரிவு செய்யும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
வழமையாக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் தெரிவாகும் இந்தத் திட்டத்தில் இந்த ஆண்டு (2020) COVID காரணமாக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் மாத்திரம் தெரிவாகும். அடுத்த வருடம் (2021) இந்த எண்ணிக்கை 30, ஆயிரமாக அதிகரிக்கும் என குடிவரவு அமைச்சர் Marco Mendicino தெரிவித்தார்.
குடும்பங்களை மீண்டும் இணைப்பது குலுக்கல் முறையிலான ஒரு திட்டமாக இருக்கக்கூடாது என எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தோல்வியுற்ற ஒரு திட்டத்தின் தாமதத்திற்கு தொற்று நோயை Liberal அரசாங்கம் காரணமாகியுள்ளதாக Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் குடிவரவு விமர்சகருமான Raquel Dancho கூறினார்.