தமிழ் மக்களுக்கான ஒரு சமூக மையம் (கலாசார நிலையம்) உருவாக்குதற்கான ஏது நிலைகள் குறித்து ஆராய்வதற்கான முயற்சிகள் 2019ஆம் ஆண்டு கனடிய தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான மற்றொரு விடயமாகும். கடந்த March மாதம் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதன்போது எட்டுப் பேர் கொண்ட இடைக்கால வழிகாட்டும் (வழிப்படுத்தும்) குழு (Interim Steering Committee) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் குழுவுக்கு தமிழ் சமூக மையத்திற்கான திட்டத்தை முன்வைப்பதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இந்தக் குழுவினால் மக்கள் கருத்தறியும் ஆலோசனை கூட்டம் ஒன்று July மாதம் முன்னெடுக்கப்பட்டது.
கனடாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழும் தமிழர் சமூகம் தனக்கான சமூக மையம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு விடயம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. தனியாகவும், குழுக்களாகவும் அமைப்பு ரீதியிலாகவும் தமிழ் மக்களுக்கான ஒரு சமூக மையத்தை அமைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பல காரணங்களினால் அவை வெற்றி பெறவில்லை. தற்போது ஒரு சமூகமாக மீண்டும் இந்த முயற்சி ஆரம்பமாகியுள்ளது. ஆனாலும் இது போன்ற நகர்வுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட ”கசப்பான” சில அனுபவங்களின் அடிப்படையில் சில கேள்விகளும் ஒதுக்கீடுகளும் சமூகத்தில் எழுவது தவிர்க்க முடியாததே. அவற்றில் ஐந்து விடயங்களை இந்தக் கட்டுரையில் நோக்கலாம்.
வழிப்படுத்தும் குழு யாரால் தெரிவு செய்யப்பட்டது?
March மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ”வழிப்படுத்தும் குழு” யாரால் (எவ்வாறு) தெரிவு செய்யப்பட்டது என்ற கேள்வி பலர் மத்தியிலும் அப்போதே இருந்தது. இந்தக் கேள்விக்கான பதில் இதுவரை தெளிவாக வழங்கப்படவில்லை. மேலும் இந்தக் குழுவில் இலங்கைத் தமிழர்கள் தவிர்ந்த (கனடாவில் பெருமளவில் வாழும் ஏனைய நாட்டு) தமிழர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. இருந்தும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை நிறைவேறவில்லை.
வழிப்படுத்தும் குழு மீதான கட்டுப்பாடு யாரிடம் உள்ளது?
இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்காக கனடாவில் இயங்கு நிலையில் உள்ள அமைப்புக்களிடம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் குறிப்பாக ஒரு அமைப்பின் பிரதிநிதித்துவம் (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்) இந்தக் குழுவில் முற்றாக இருக்கவில்லை. மாறாக மற்றுமொரு அமைப்பின் பிரதிநிதித்துவம் (கனடிய தமிழர் தேசிய அவை) அதிகளவில் உள்ளது. இது (மீண்டும்) குறிப்பாக ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த முயற்சி இட்டுச் செல்லப்படுமோ என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. அதன் மூலம் இந்த முயற்சி மீது மீண்டும் சாயம் பூசப்படுமோ என்ற கரிசனையும் இங்கு பகிரப்பட வேண்டியது.
இடைக்கால வழிப்படுத்தும் குழு நிரந்தர வழிப்படுத்தும் குழுவானது எப்படி?
முதலில் (March) அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு “இடைக்கால வழிப்படுத்தும்” குழு (Interim Steering Committee) என்றும் அந்தக் குழு நிரந்தர உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அடையாளப்படுத்துவார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனாலும் நடைபெற்றது அதுவல்ல. இடைக்கால வழிப்படுத்தும் குழு எப்போது (அல்லது எவ்வாறு) நிரந்தர வழிப்படுத்தும் குழுவானது என்பதில் தெளிவில்லை. அவ்வாறாயின் இந்த குழு முழுமையான திட்டத்தையும் வழிநடாத்துமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
அமைப்பிடத்திற்கான தெரிவிட த்தின் முக்கியத்துவம்!
இந்த சமூக மையத்தை Scarboroughவில் அமைப்பதற்கான பின்னணி புரிந்து கொள்ளப்படக்கூடியது. ஆனாலும் இதன் அமைவிடத்திற்கு, Scarborough தவிர்ந்த Toronto பெரும்பாகத்தின் அண்மைய நகரங்களையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். தமிழர்கள் பெருமளவில் வாழும் Markham, Ajax, Pickering, Mississauga, Brampton உள்ளிட்ட நகரங்களை இதுபோன்ற ஒரு திட்டத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். இது சமூக மைய அமைவிடத்திற்கான தேடலை ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறைக்காது. இந்த நகரங்களின் முதல்வர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு அழைத்திருந்தல் வேண்டும். ஆனாலும் வழிப்படுத்தும் குழுவினால் அதுபோன்ற ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. உதாரணமாக Brampton நகர முதல்வர் Patrick Brown தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். அவரது நம்பிக்கைக்குரிய உள் வட்டத்தில் பல தமிழர்கள் உள்ளனர். அதன் மூலம் சமூக மைய அமைவிடத்திற்கான விசாலமான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது இலகுவாக இருக்கும்.
நிதி சேகரிப்பில் வெளிப்படைத்தன்மையின் அவசியம்!
March மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ”வழிப்படுத்தும் குழு” தனது முதலாவது (March 31) சந்திப்பில் தாம் எதிர்கொள்ளும் பணிகளை கலந்துரையாடி இரு உப குழுக்களாக பிரிந்து கொண்டன. அவற்றில் ஒன்று நிதித் திட்டக் குழு. இந்தக் குழு, தமிழ்ச் சமூக மையத்தை அமைப்பதற்கான திட்டத்துக்கு தேவைப்படும் நிதிக்கான உத்தரவாதத்தை அரசாங்கங்களிடம் இருந்தும் தமிழர் சமூகத்திடம் இருந்தும் திரட்டுவதற்கான சாத்திங்களை ஆராய தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழர் சமூகத்திடம் இருந்து நிதி சேகரிப்பது குறித்து July மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் ஆலோசனை கூட்டத்திலும் குறிப்பிடப்பட்டது. இந்த நிதி சேகரிப்பு என்ற விடயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். தமிழர் சமூக்கத்தைப் பொறுத்தவரை நிதி சேகரிப்பு என்ற விடயத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பல நம்பிக்கையீனங்கள் உள்ளன. அவை மீண்டும் தலை தூக்காமல் இருப்பதை உறுதி செய்வது பெரும் சவாலாகும்.
தமிழ் மக்களுக்கான ஒரு சமூக மையம் என்பது கனடாவில் காலம் கடந்த ஒரு திட்டம். ஆனாலும் அதனை நோக்கிய நகர்வுகள் கவனமாக திட்டமிடப்பட வேண்டியது. சமூக மையத்திற்கான வழிமுறைகள் அதன் முடிவை நியாயப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கதாஸ் பத்மநாதன்