பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற அழைப்பு அதிகரித்து வரும் நிலையில், Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் திங்கட்கிழமை (16) மாலை நடைபெற்றது.
அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கள் காலை அறிவித்த நிலையில் இந்த அவசர நாடாளுமன்ற குழு கூட்டம் திங்கள் மாலை நடைபெற்றது.
பிரதமர் Justin Trudeau இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆனலும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் என்ன கூறினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து Chrystia Freeland விலகிய பின்னர், Justin Trudeau இதுவரை செய்தியாளர்களை சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் Liberal நாடாளுமன்ற குழுவின் நம்பிக்கையை பிரதமர் கொண்டுள்ளாரா என்ற கேள்விக்கு மாறுபட்ட பதில்கள் வெளியாகின்றன.
பிரதமர் தொடர்ந்தும் நாடாளுமன்ற குழுவினரின் நம்பிக்கையை கொண்டுள்ளார் என Ontario நாடாளுமன்ற உறுப்பினர் James Maloney நிருபர்களிடம் கூறினார்.
ஆனாலும் நாடாளுமன்ற குழுவின் நிலை அவ்வாறு இல்லை என மற்றொரு Ontario நாடாளுமன்ற உறுப்பினர் Chad Collins மறுதலித்தார்.
“நாடாளுமன்ற குழுவில் பேசப்பட்ட விடயங்கள் அடிப்படையில் இரகசியத்தன்மையை மீறப் போவதில்லை” என கூறிய Chad Collins, ஒரு கட்சியாக “நாங்கள் ஒன்று பட்ட நிலையில் இல்லை என்பதை கூற முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்”
“தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என எங்கள் உறுப்பினர்கள் பலர் நினைக்கிறார்கள்” என கூறிய Chad Collins “அவர்களில் நானும் ஒருவன்” எனவும் தெரிவித்தார்.