அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மத்திய பொது ஊழியர்கள் புதன்கிழமை (19) வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த விடயத்தில் கனடாவின் மிகப்பெரிய மத்திய அரசின் பொதுச் சேவைகள் சங்கம் மத்திய அரசுக்கான இறுதி எச்சரிக்கை ஒன்றை திங்கட்கிழமை (17) விடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (18) இரவு 9 மணிக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் ஆரம்பமாகும் என மத்திய அரசின் பொது சேவைகள் சங்கம் கூறியுள்ளது.
சுமார் 155 ஆயிரம் ஊழியர்கள் புதன்கிழமை வேலையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கனடாவின் பொதுச் சேவை கூட்டமைப்பு தெரிவித்தது.
இதில் கனடா வருவாய் முகமை துறையை சேர்ந்த 35 ஆயிரம் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.
தொழிற்சங்கத்திற்கும் கருவூல வாரியத்திற்கும் இடையே மத்தியஸ்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வார இறுதியில் தொடர்ந்தன.
இந்த பேச்சுக்களில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அவை வேலை நிறுத்தத்தை கைவிட போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (14) முதல் 155 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடிய சட்டப்பூர்வ நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலை நிறுத்தம், வரிச் செயலாக்கம், கடவுச்சீட்டு புதுப்பித்தல், வேலை வாய்ப்பு காப்பீடு, சமூகக் காப்பீடு விண்ணப்பங்கள், கனடா ஓய்வூதியத் திட்ட விண்ணப்பங்கள், சுதேச சேவைகள், படைவீரர் விவகாரங்கள் சேவைகள் உட்பட பல மத்திய அரசின் சேவைகளை பாதிக்கும் நிலை தோன்றியுள்ளது.