தேசியம்
இலக்கியம்

சேரன் உருத்திர மூர்த்தியின் அஞர் கவிதைத் தொகுப்புக்கு ஆனந்த விகடனின் நம்பிக்கை விருது!

கனடாவில் வாழும் கவிஞர் சேரன் உருத்திர மூர்த்திக்கு 2019 ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

சேரன் உருத்திர மூர்த்தியின் அஞர் கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்பாக தெரிவாகியுள்ளது. இந்த கவிதைத் தொகுப்பை காலச் சுவடு பதிப்பகம் வெளியிட்டது.  காலற்றவளின், ஒரு கையில் குழந்தை, மறுகையில் கணவனின் துண்டிக்கப்பட்ட தலை, தொடைகளுக்கு இடையில், வன் புணரும் படையாளின் துர்க் கனவு என தமது கவிதை வரிகளில் வலி கடத்தும் சேரன் உருத்திர மூர்த்தி, தனது ‘அஞர்’ கவிதை தொகுப்பு வழியே கோடிக்கணக்கான ஈழத்தமிழர்களின் மன வதையைப் பதிவு செய்துள்ளார். பல இலட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாதைகளை, கோபங்களை, ஆற்றாமைகளை, நினைவுகளைக் கவிதை மொழியாக்கினால் அது தான் ‘அஞர்’ என ஆனந்த விகடன் குறிப்பிடுகின்றது.

‘அஞர்’ சேரன் உருத்திர மூர்த்தியின் பத்தாவது கவிதைத் தொகுப்பாகும். போரின் துயரை முன்வைத்து வாழ்வின் மீதான வேட்கையை அதிகரிக்கச் செய்கின்றன இக் கவிதைகள். `நெஞ்சே நினை. நினைவிலிக்கு வாழ்வில்லை ’என ஈழப்போர் இழப்புகளின் சாட்சியமாய் உலகின் முன்வைக்கப்பட்டிருக்கும் அஞர் கவிதைகள் தனித்துவமானவை.

சேரன் உருத்திர மூர்த்தி யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராவார். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன் இவர். 1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமானது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், பாடல்கள் என இவரது இலக்கிய செயல்பாடுகள் பல. இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

கனடா, York பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தற்போது  Windsor பல்கலைக் கழகத்தின் சமூகவியல், மானுடவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

Leave a Comment