York பிராந்திய இல்லம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் தமிழர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Ontario மாகாணத்தில் உள்ள Georgina என்னும் இடத்தில் உள்ள ஒரு இல்லத்தின் மீது இவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் 21 வயதான விஷால் சுதாகர் என்பவரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு November 3-ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்றையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.
அதில் குறிப்பிட்ட நபர் சாலையின் நடுவில் நின்று, வீட்டின் மேல் மாடியை நோக்கி தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வது பதிவாகியுள்ளது.
பின்னர் அவர், அங்கு காத்திருந்த SUV வாகனத்தில் பயணிகள் இருக்கையில் ஏறி தப்பிச் செல்வதையும் இந்த காணொளி காட்டுகிறது.
இவர் ஆறு வினாடிகளுக்குள் சுமார் 18 தடவைகள் குறிப்பிட்ட இல்லத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை காணொளி காட்டுகிறது.
இதில் இல்லத்தின் மேல் மாடி படுக்கையறை ஜன்னல் உடைந்து, படுக்கையறைக்குள் பல துப்பாக்கிச் சூட்டு துளைகள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இது இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என கூறும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த தமது விசாரணைகளை தொடர்வதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களில் ஒருவரை Hamilton காவல்துறையினரின் உதவியுடன் York பிராந்திய காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
Torontoவை சேர்ந்த சந்தேக நபர் விஷால் சுதாகர் மீது வேண்டுமென்றே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது, பிணை உத்தரவுகளை பின்பற்ற தவறியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது, இவர் முந்தைய குற்றச்சாட்டுகளுக்காக பிணையில் விடுதலையாகி இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
இதில் மற்றொரு சந்தேக நபர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
ஆனாலும் அவர் குறித்த எந்த விவரங்களையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.