இலங்கை அரச அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக Ontario மாகாண இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.
மூன்று இலங்கை இராணுவத் தளபதிகள் உட்பட நால்வருக்கு எதிராக பயணத் தடை உட்பட பல தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.
இவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரித்தானியா இந்தத் தடையை விதித்துள்ளது.
ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் இராணுவத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவும் அமெரிக்காவும் முன்வைத்த உதாரணங்களைப் பின்பற்றி, தமிழின அழிப்பில் பங்கேற்றவர்களை பொறுப்புக்கூற வைப்பதில் இது ஒரு முக்கிய படியாகும் என விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.
இதில் அர்த்தமுள்ள விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கனடா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பிரித்தானியாவின் நடவடிக்கைகள் நீதி, பொறுப்புக்கூறலுக்கான உலகளாவிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகின்றன என கூறினார்.