கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (04) நடைமுறைக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
தவிரவும் கனடிய எரிசக்தி மீது 10 சதவீத வரி செவ்வாய்க்கிழமை முதல் விதிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதையும் செய்ய கனடாவுக்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (03) பேசிய Donald Trump கூறினார்.
கனடிய எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ஒப்புக் கொண்டதையடுத்து, பொருளாதாரம் தழுவிய வரி கட்டணங்களை அமுல்படுத்துவதற்கான Donald Trumpபின் நிர்வாக உத்தரவு செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிர்வாக உத்தரவில் உள்ள வார்த்தைகள் நள்ளிரவு முதல் வரிவிதிப்புகள் ஆரம்பிக்கும் என்பதை குறிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் திங்களன்று உறுதிப்படுத்தினார்.
இந்த வரிவிதிப்புகள் நடைமுறைக்கு வந்தால், கனடா முன்னர் அறிவித்த பதில் வரிவிதிப்பு திட்டம் நடைமுறைக்கு வரும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly கூறினார்.
முதலில் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மூன்று வாரங்களுக்கு பின்னர் மற்றொரு 125 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்படும்.
இந்த வரி விதிப்பை தடுப்பதற்கு கனடிய அதிகாரிகளும், மாகாண முதல்வர்களும் அமெரிக்க தலைநகரில் ஒரு மாத கால இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.