அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau இந்த மாத ஆரம்பத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளதாக Justin Trudeau புதன்கிழமை (15) அறிவித்தார்.
அரசியலில் இருந்து விலகிய பின்னர் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து இதுவரை சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை என தனது அறிவித்தலில் Justin Trudeau கூறினார்.
கனடா ஒரு அசாதாரணமான சவாலை எதிர்கொள்ளும் நிலையில் தொடர்ந்தும் நாட்டை வழிநடத்துவதில் கவனம் செலுத்துவதாக பிரதமர் கூறினார்.
Quebec மாகாணத்தின் Papineau தொகுதியில் 2008 இல் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Justin Trudeau, 2013 முதல் Liberal கட்சியின் தலைவராக உள்ளார்.
பிரதமராக ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய, அவருக்குப் பதிலாக கட்சி தலைமையை ஏற்பவருக்கான போட்டி இதுவரை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கவில்லை.
Liberal கட்சியின் புதிய தலைவர் March 9 அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.