கனடிய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தால் அது இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.
CNN அமெரிக்க தொலைக்காட்சிக்கு வியாழக்கிழமை (09) வழங்கிய செவ்வியில் Justin Trudeau இந்தக் கருத்தை தெரிவித்தார்.
வரி பாதிப்பு விடயத்தில் மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகளை Donald Trump முன்னெடுப்பதாகவும் அந்த செவ்வியில் பிரதமர் கூறினார்.
அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா மாறும் என்ற பேச்சு இந்த திசை திருப்பல் முயற்சியின் ஒரு அங்கம் என Justin Trudeau தெரிவித்தார்.
Donald Trump, வரி குறித்த உரையாடல் மூலம் மக்களை திசை திருப்புகிறார் எனவும் Justin Trudeau கூறினார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து கனடிய பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என Donald Trump கூறியிருந்தார்.
இந்த நிலையில் கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கப்படுவதை கனடா விரும்பவில்லை என கனடிய பிரதமர் தெரிவித்தார்.
இதற்கு பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தனது அரசாங்கம் விரும்பவில்லை எனவும் கூறிய அவர், அதற்கு தூண்டப்பட்டால் பதில் நடவடிக்கை முன்னெடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
கனடாவில் வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை கனடிய அதிகாரிகள் தயாரித்து வருவதாக கூறப்படும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Jimmy Carterரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக கனடிய பிரதமர் வியாழனன்று அமெரிக்கா பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.