அமெரிக்க அதிபராக Donald Trump பதவியேற்க உள்ள நிலையில் கனடாவில் தேர்தல் ஒன்று நடைபெறக் கூடாது என கனடாவின் பசுமைக் கட்சி தலைவர் தெரிவித்தார்.
Liberal அரசாங்கத்தை பதவியில் இருந்து விலத்த பல எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த கருத்து வெளியானது.
Donald Trump இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், கனடா மத்திய தேர்தலுக்கு செல்லக்கூடாது என பசுமைக் கட்சியின் தலைவர் Elizabeth May தெரிவித்துள்ளார்.
Justin Trudeauவின் நிலைப்பாடு பலவீனமானது என்பதற்காக கனடாவின் நிலைப்பாடு பலவீனமானது என்பது அர்த்தமல்ல என அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை (03) காலை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் கனடாவில் தேர்தல் நடைபெறுவது சிறந்ததல்ல என Elizabeth May கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் விரைவில் அரசாங்கத்தை கவிழ்க்க பல எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இது ஒரு திடீர் தேர்தல் ஒன்றைத் தூண்டும்.
இந்த மாத ஆரம்பத்தில் நிலைக்குழு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க பரிசீலிக்க Conservative கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பின்னர் நாடாளுமன்றத்திற்கு நகர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Conservative கட்சியின் திட்டப்படி அனைத்தும் நடந்தால், January 30 ஆம் திகதிக்குள் பிரதமர் Justin Trudeauவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்களிப்பு நடைபெறும்.
தனது கட்சியும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசாங்கத்தை கவிழ்க்க தயாராக உள்ளது என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.
முன்னாள் நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து திடீரென விலகியதைத் தொடர்ந்து Justin Trudeau பல சவால்களை எதிர் கொள்கிறார்.
Justin Trudeau பதவி விலக வேண்டும் என Quebec, Atlantic, Ontario மாகாணங்களின் Liberal கட்சி நாடாளுமன்ற குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் Liberal கட்சியின் உள் விவகாரங்களில் கருத்து தெரிவிக்க Elizabeth May மறுத்துள்ளார்.