Ontario மாகாண அரசாங்கம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் 200 டொலர் வரி இல்லாத தள்ளுபடி கொடுப்பனவு – tax-free rebate – ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளது.
முதல்வர் Doug Ford செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்ததை வெளியிட்டார்.
Doug Ford அரசாங்கம் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்த அறிவித்தல் வெளியானது.
தகுதியுள்ள 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோர் கூடுதலாக 200 டொலர்களை பெறுவார்கள் எனவும் முதல்வர் கூறினார்.
புதிய ஆண்டின் ஆரம்பத்தில் இதற்கான காசோலைகள் அனுப்பி வைக்கப்படும் என Doug Ford தனது அறிவித்தலில் தெரிவித்தார்.
இந்த கொடுப்பனவுகளுக்காக Ontario மாகாணத்திற்கு 3 பில்லியன் டொலர் செலவாகும் என Ontario மாகாண அரசாங்கம் கூறியது.
மத்திய அரசின் carbon வரி, வட்டி விகிதங்களின் அதிக செலவுகள் காரணமாக Ontario அரசாங்கம் இந்தத் தள்ளுபடிகளை வழங்குகிறது என Doug Ford தெரிவித்தார்.
முதல்வர் Doug Ford அடுத்த ஆண்டு முன்கூட்டிய தேர்தலை நடத்தலாம் என்ற ஊகத்தின் மத்தியில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த தள்ளுபடி கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள்;
- 2023 இன் இறுதியில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்;
- December 31, 2023 அன்று Ontario மாகாணத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்;
- December 31, 2023 க்குள் தங்கல் 2023 வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.