ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளில் இருந்து தமிழ் கனடியர்களை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.
தமிழ் கனடியர்களை பாதுகாக்க கனடிய அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என புலம்பெயர் சமூகங்களின் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையில் சாட்சியம் அளித்த போது பிரதமர் கூறினார்.
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த ஆணையத்தில் Justin Trudeau இந்த வாரம் சாட்சியமளித்தார்.
தமிழ் கனடியர்களின் வாழ்வில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்து தலையிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் கனடியர்களின் வாழ்வில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தலையீடு குறித்த குற்றச்சாட்டை தமிழர் உரிமைக் குழுவின் (Tamil Rights Group – TRG) கற்பனா நாகேந்திரா, அண்மையில் முன்வைத்திருந்தார்.
தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு தூபி கட்டும் பணியை நிறுத்துமாறு Brampton நகர முதல்வர் Patrick Brownக்கு Torontoவில் உள்ள இலங்கையின் தூதரக தூதரக அதிகாரி Thushara Rodrigo, கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
தேசியம் பிரத்தியேகமாக வெளியிட்ட இந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனா நாகேந்திராவின் கருத்து முன் வைக்கப்பட்டது.
இதே கடிதத்தை மேற்கோள் காட்டி, கனடிய உள்நாட்டு விடயங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகள் குறித்து கவனம் செலுத்த Patrick Brown கனடிய வெளிவிவகார அமைச்சரை கோரியிருந்தார்
ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான பின்விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்படுவதை உணர்ந்து, தண்டனையின்றி தொடர்ந்து செயல்படும் வரை, கனடாவில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக மிரட்டல் தந்திரங்களை அவர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என கற்பனா நாகேந்திரா கூறியிருந்தார்.
பல புலம்பெயர் சமூகங்களைப் போலவே தமிழ் கனடியர்களும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்வதாக கூறிய Justin Trudeau, அவர்களைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.