முன்னாள் கனடிய தமிழர் கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மறைவை அடுத்து செவ்வாய்க்கிழமை (02) திருமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை நாடாளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்ட போது , சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவியேற்றார்.
திருமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார்.
இவர் 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்டக் கிளை தலைவராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.