தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

மாற்றம் குறித்த குழப்பத்தில் பேரவை?

மாற்றம் எப்போதும் வெற்றி தரும் என்பதை கனடியத் தமிழர் பேரவை தவறாக புரிந்து வைத்துள்ளது போலும்!

புதிய இயக்குநர்கள் சபையை நியமித்துள்ளதாக இந்த வாரம் CTC அறிவித்தது. இந்த நியமனம் மாற்றம் குறித்த பேரவையின் குழப்பத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ள போதிலும், எப்போது தேர்தல் நடைபெற்றது, பதவிகளுக்கு யார் போட்டியிட்டனர், இதில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எத்தனை பேர், யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது போன்ற அடிப்படை விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மாற்றம் எப்போதும் வெற்றி தரும் என்பதை கனடியத் தமிழர் பேரவை தவறாக புரிந்து வைத்துள்ளது !

புதிய இயக்குநர்கள் சபை

புதிய இயக்குநர்கள் குழுவின் தேர்தல் என இதனை CTC அழைக்கின்ற போதிலும் – நடைபெற்றது தேர்தல் அல்ல – நியமனம். இது இந்த செயல்முறைக்கு நெருக்கமானவர்களுடன் பேசும் போது தெரிய வந்தது. இந்த நியமனங்களை யார் மேற்கொண்டார்கள் என்ற அடிப்படை கேள்வி உட்பட பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

அழைக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு முன்னரே யார் எந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுகின்றனர் என்ற விபரங்கள் தகவல் அறிந்த வட்டத்தில் வெளியாகி இருந்தது.

குமார் ரட்ணம் தலைமை பதவிக்கு ஏக மனதான தெரிவல்ல!

குமார் ரட்ணம் பேரவையின் தலைவராக வேண்டும் என்ற பேச்சு ஒன்றும் புதிதான விடயம் அல்ல. பேரவையின் தலைமை பதவிக்கு ராஜ் தவரட்ணசிங்கம் முதல் தடவையாக நியமிக்கப்பட்ட போது குமார் ரட்ணத்தின் பெயரும் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் அப்போது முடிவெடுக்கும் தரப்பு குமார் ரட்ணத்தை தாண்டி ராஜ் தவரட்ணசிங்கத்தை தலைமை பதவிக்கு நியமித்தது.

அந்த நியமனமும் அதைத் தொடர்ந்த முடிவுகளும் கனடிய தமிழர்கள் பல ஆண்டுகள் பின் நோக்கி நகர வைத்தது என்பதை அனைவரும் அறிவார்கள்!

அன்று நிராகரிக்கப்பட்ட குமார் ரட்ணம் இன்று மீண்டும் நியமனம் பெறுகிறார்.

ஆனால் இப்போதும் குமார் ரட்ணம் தலைமை பதவிக்கு முதல் (அல்லது ஏக மனதான) தெரிவல்ல என்பதை மாத்திரம் சொல்லி வைக்கலாம்.

இப்போதும் ஒரு தரப்பு வேறு ஒருவரை தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தாம் – ஆனாலும் அந்த எண்ணம் காரியமாகவில்லை!

கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும் அமைப்பில் அதன் அங்கத்துவ முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த நியமனம் உட்பட பேரவை குறித்த விமர்சனங்களின் அடிநாதம். இந்த நியமனங்கள் குறித்து தொக்கி நிற்கும் கேள்விகள் – கடந்த பல வருடங்களாக பேரவை குறித்து உள்ள கேள்விகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

பேரவை குறித்து உள்ள முதன்மையான கேள்வி – அதன் அங்கத்தவர்கள் எண்ணிக்கை என்ன என்பதேயாகும். ஆர்வமுள்ள – தகுதியுடைய கனடிய தமிழர்களுக்கு அங்கத்துவ உரிமையை மறுக்கும் முடிவில் CTC இதுவரை மாற்றத்தை மேற்கொண்டதாக இல்லை. தொடர்ந்தும் “குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் ..” நிலைதான் இது.

அங்கத்துவ முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை!

பேரவைக்கு இவை முக்கியமான நாட்கள். கனடிய தமிழர் பெருவிழா என்னும் Tamil Fest கனி அந்தரத்தில் ஆடும் நிலையில் புதிய இயக்குநர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

உண்மையில் இந்தத் தேர்வு நெறிமுறையற்றது!

பேரவையின் கடந்த இயக்குநர்கள் குழு, சமூகத்தின் நம்பிக்கையை இழந்து பல மாதங்களாகி விட்டது. தமது தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற சமூகத்தின் அறைகூவலுக்கு இதுவரை பதில் இல்லை.

மாறாக கனடிய தமிழர் சமூகத்தின் நம்பிக்கைக்கும் விருப்பங்களுக்கு பங்கம் விளைவித்த முன்னாள் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் சிலரையும் உள்ளடக்கி புதிய இயக்குநர்கள் குழு அமைந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது – “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்றது

புதிய இயக்குநர் சபை நியமனம் நெறிமுறையற்றது!

குறிப்பாக இமாலயப் பிரகடனம் என்னும் பெரும் தவறை கனடியத் தமிழர்கள் பெயரில் செயல்படுத்த முயன்று அதற்கான எதிர்ப்பு வலுப்பெற்ற காரணத்தால் பாதை மாறிய தலைமை – அதற்கு எந்தப் பொறுப்பும் எடுக்காமல் மீண்டும் கனடிய தமிழர்களின் குரலாக இயங்க முயல்வதை கனடிய தமிழர்கள் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியாது!

முன்னர் முன்வைத்த கோரிக்கைதான் மீண்டும்!

கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், நிர்வாக இயக்குனர், ஆலோசகர் சபை  உட்பட தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். தவறிழைத்தவர்கள் தொடர்ந்து முடிவெடுக்கும் நிலையில் இருந்து கொண்டு தவறை திருத்த முடியாது – கூடாது!

CTC தன்னை இன்னமும் கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக அடையாளம் காட்டுகிறது – அனால் அதன் நகர்வுகள் எவையும் அதை பிரதிபலிப்பதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

February முதல் வாரத்தின் பின்னர் CTC (கேள்வி கேட்கும்) எந்த ஒரு ஊடகத்தையும் பொது வெளியில் சந்தித்து தமது நிலைபாடுகள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான காரணிகள், புதிய இயக்குநர்கள் சபை  நியமனம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசவில்லை என்பதை இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டி உள்ளது.

ஊடகங்களை தொடர்ந்தும் புறக்கணிக்கும் CTC

உண்மையான சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத்தன்மையை பேணக்கூடியவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்று முன் நகர வேண்டும்.

பேரவையின் அசமந்தப் போக்குக்கும் – பொறுப்பு கூறாத தன்மைக்கும் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒருவகையில் காரணமாகின்றனர். பேரவையில் அவசியமான மாற்றங்களுக்கு  ஒவ்வொரு உறுப்பினரும் அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.

கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய தமிழர்களின் அமைப்பு. அது கனடிய தமிழர்களின் முழுமையான நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக இருப்பது அவசியம்.

இம்முறை Tamil Fest ஒரு “சமூகக் குழு” (Working Committee) தலைமையில் கனடிய தமிழர் விழாவாக நடைபெற வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. இன்றைய நிர்வாகம் தெருவிழாவை நடத்துவது கனடிய தமிழ் சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரும் பாதகம்!

அதேவேளை இம்முறை தமிழர் தெருவிழாவின் வரவு செலவு பொது வெளியில் பகிரப்படவேண்டும். கனடிய தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பிற்கு இது ஒன்றும் சவாலான விடயமாக இருக்க முடியாது – கூடாது!.

இன்னும் வளரும்!

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

இந்தப் பொதுத் தேர்தலில் உள்ள மாற்றங்கள் என்ன?

Gaya Raja

தமிழ் சமூகத்திற்கான ஒரு புதிய இலக்குக் கொண்ட சமூக மையம்

Gaya Raja

எங்களில் பலருக்கும் தெரியாத கனடா!

thesiyam

Leave a Comment