தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

காக்க காக்க “தெருவிழாவை” காக்க!

கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம் உடனடியாக பதவி விலகி – இம்முறை Tamil Fest ஒரு சமூகக் குழு தலைமையில் நடைபெற வேண்டும்!

மீண்டும் Tamil Fest அறிவிப்பு வெளியாகும் காலம் இது!

கனடிய தமிழர் பெருவிழாவாக நடைபெறும் இந்த தெருவிழா குறித்த அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் சில கண்களில் படுகின்றன. ஆனாலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் கனடியத் தமிழர் பேரவையின் இணையம், சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வு குறித்த அறிவித்தல் எதையும் காண கிடைக்கவில்லை.

கனடியத் தமிழர் பேரவை (CTC) கடந்த சில மாதங்களாக ஒரு ஆமை வேகத்தில் நகர்வதை அவதானிக்க முடிகிறது.

இமாலய பிரகடனம், உலகத் தமிழர் பேரவையுடன் கூட்டு, இனப்படுகொலை குறித்த நிலைப்பாடு என கனடியத் தமிழர் பேரவையின் பல நகர்வுகள் அண்மைக் காலத்தில் எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் தெருவிழா விடயத்தில் அவர்கள் அகலக்கால் எடுத்து வைக்க மாட்டார்கள்.

ஆனாலும் தெரு விழாவை காக்க சிறு சிறு நகர்வுகளை அவர்கள் எடுக்க ஆரம்பிக்கின்றனர்.

கனடாவில் தமிழர்களின் குரல் என தம்மை அடையாளப்படுத்தும் CTC, 15 வருட கெட்ட கனவில் இருந்து May மாதத்தின் நடுப்பகுதியில் தான் எழுந்தது. இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை என CTC இரவோடு இரவாக ஒரு அறிக்கையில் ஏற்றுக் கொண்டது – அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது – அல்லது ஏற்றுக் கொண்டால் தான் தெரு விழாவை நடத்த முடியும் என்ற கசப்பான உண்மையை உணர்ந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச – CTC சந்திப்பு?

பின்னர் உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர் நிலையில் இருந்து விலகும் முடிவை தனது உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பகிர்ந்தது. இந்த பத்தி பதிவேற்றும் போது இந்த முடிவு பொது வெளியில் அறிவிக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்த பத்தியாளரிடம் கூறினர்.

இமாலய பிரகடனத்திற்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை – CTC விரைவில் அறிவிப்பு?

தொடர்ந்து இமாலய பிரகடனத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என புதிய எலும்புத் துண்டை CTC எறியும் காலம் தொலைவில் இல்லை.

January மாதம் முன்னெடுக்கும் பொங்கல் பொது நிகழ்வை இரத்து செய்து – அழைக்கப்பட்ட விருந்தினருடன் மாத்திரம் மூடிய அறைக்குள் ஒரு நிகழ்வை நடத்தி முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது CTC. இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் வருகையை உறுதிப்படுத்த தமது அலுவலகம் தாக்கப்பட்டது என்ற விடயத்தை மறைத்தது இந்த நிர்வாகம் தான்.

CTC அலுவலகம் தாக்கப்பட்டதாக கூறப்படுவது January 27 (சனி) அதிகாலை. அதன் பின்னர் வந்த நாட்களில் இரண்டு பொது நிகழ்வுகளை CTC நடத்தியிருந்தது. ஒரு நிகழ்வு January 27 (சனி) மாலை Scarborough நகரிலும், மற்றொரு நிகழ்வு January 28 (ஞாயிறு) மாலை Pickering நகரிலும் நடைபெற்றது.

Pickering அரசியல் நுழைவு!

அதில் முதல் நிகழ்வு CTC உரிமை கோரிய தமிழ் மரபுத் திங்கள். பொது வெளியில் அறிவிக்கப்படாமல் – அழைக்கப்பட்ட விருந்தினருடன் மாத்திரம் நடைபெற்றது. இரண்டாவது நிகழ்வு முதலில் எந்த வித உரிமை கோரல் இல்லாமல் Pickering நகரில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள். இந்த நிகழ்வை CTC நடத்தியது என உரிமை கோரப்பட்டது February இரண்டாவது வாரத்தில் தான். ஆனாலும் இந்த நிகழ்வு Pickering நகரில் CTC முன்னாள் தலைவியின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அடித்தளம்.

CTC அலுவலகம் தாக்கப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது January 29 (திங்கள்). அதாவது CTC அலுவலகம் தாக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு மூன்றாவது தினம்.

மூடிய அறைக்குள் பொங்கல்!

இமாலயப் பிரகடனம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊடகர் சந்திப்பொன்றை CTC முதலில் நடத்துவதாக அறிவித்த தினம் January 5. அழைக்கப்பட்டவர்களுடன் மாத்திரம் நடைபெற இருந்த இந்த சந்திப்பை இறுதி நேரத்தில் (நிகழ்வு நடைபெறுவதற்கு முதல் நாள் பின்னிரவு) CTC இரத்து செய்திருந்தது.

இதற்காக தெரிவிக்கப்பட்ட காரணம் “பாதுகாப்பு”.

அதாவது இந்த ஊடகர் சந்திப்பு நடைபெறுவது பாதுகாப்பற்றது என்ற காரணத்தால் அந்த சந்திப்பை இரத்து செய்திருந்ததாக February 2 நடைபெற்ற ஊடகர் சந்திப்பில் CTC நிர்வாக சபை விளக்கம் தெரிவித்தது.

அப்படியானால் January 27 மாலை Scarborough நகரிலும், January 28 மாலை Pickering நகரிலும் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் “பாதுகாப்பாக தான்” நடைபெற்றனவா?.

CTC அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன்னர் (January 5) இருந்த பாதுகாப்பற்றது என்ற நிலை – January 27, 28 – அதாவது CTC அலுவலகம் தாக்கப்பட்ட சில மணி நேரங்களில் – எவ்வாறு பாதுக்காப்பானதாக மாறியது?.

பொறுப்பற்ற CTC நடவடிக்கை!

இந்த இரண்டு நிகழ்வுகள் முன்னரும் – நிகழ்வுகளின் போதும் CTC அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து பகிரங்கப்படுத்தாதது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை அல்லவா?. இது அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாத ஒரு விடயமல்லவா?.

CTC தமது அலுவலகம் தாக்கப்பட்டதை ஏன் மூன்று நாட்கள் மறைத்தார்கள்? அலுவலக தாக்குதலை  மறைத்து இரண்டு நிகழ்வுகளை நடத்தி அதில் தமது அங்கத்தவர்களை – கனடிய தமிழர்களை அழைப்பதன் மூலம் CTC நிர்வாகம் அவர்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது அல்லவா?.

CTC அலுவலகம் தாக்கப்பட்டது போன்ற ஒரு வன்முறை சம்பவம் இந்த இரண்டில் ஒரு நிகழ்வில் நடைபெற்றிருந்தால்  – அதற்கு பொறுப்பு யார்?.

மூன்று தினங்கள் மறைக்கப்பட்ட CTC அலுவல தாக்குதல்

இவ்வாறெல்லாம் தம் பக்கத்தில் தவறுகளை வைத்துக் கொண்டு CTC அலுவலகம் மீது நிகழ்ந்ததாகக் கூறப்படும் தாக்குதலை மக்கள் பிரதிநிதிகள் – MP, MPP, நகர சபை உறுப்பினர், கல்விச் சபை உறுப்பினர் – கண்டிக்கவில்லை என்று கோருவது ஒரு பொது அமைப்புக்கு பொறுப்பற்ற நகர்வல்லவா?

CTC அலுவலகம் மீது நிகழ்ந்ததாகக் கூறப்படும் தாக்குதல் கடுமையான தொனியில் கண்டிக்கப்பட வேண்டியது. இதில் எனது கண்டனத்தை பொதுவெளியில் உடனடியாக பகிர்ந்திருந்தேன். அதே தொனியில்  தமது அங்கத்தவர்கள் – கனடிய தமிழர்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திய CTC நிர்வாகத்தின் பெறுப்பற்ற நகர்வுக்கு கண்டனம் தெரிவிக்க தானே வேண்டும்.

கனடிய நாடாளுமன்றத்தில் May மாதம் நடத்த திட்டமிட்ட “முள்ளிவாய்க்கால் நினைவு” நிகழ்வை காதோடு காது வைத்தது போல் இரத்து செய்தது CTC. அதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும் உண்மையான காரணம் – மக்கள் பிரதிநிதிகள் CTC ஏற்பாடு செய்யும் நிகழ்வில் பங்கேற்க தயாராக இருக்கவில்லை என்பதுதான்.

இனப்படுகொலை, GTF, இமாலய பிரகடனம் போன்றவற்றில் தலைகீழான நிலைப்பாடு!

இப்போது “இனப்படுகொலை” விடயத்தில் தலைகீழான நிலைப்பாடு ஒன்றை பொது வெளிக்காக அறிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு எவ்வாறு தோன்றியதோ அதே போன்ற நிலை, GTF, இமாலய பிரகடன விடயத்திலும் அவர்களுக்கு தோன்றியுள்ளது.

பிரதமர் வருகை!

இந்த அறிவிப்புகளின் பின்னணியில் உள்ள மந்திரச்சொல் “Tamil Fest”.

“Tamil Fest” நடைபெற வேண்டும் – அதை CTC தான் நடத்த வேண்டும் – ஆனாலும் தற்போது உள்ள தலைமை நடத்தக் கூடாது!

நிற்க, “Tamil Fest” நடைபெற வேண்டும் என்பது இந்த பத்தியாளரின் உறுதியான நிலைப்பாடு. அதை CTC தான் நடத்த வேண்டும். ஆனாலும் தற்போது உள்ள தலைமை இந்த தெரு விழாவை நடத்துவது மீண்டும் கனடிய தமிழர்களை நடுத் தெருவில் நிற்க வைக்கும் ஒரு நகர்வாக தான் இருக்கும்.

“Tamil Fest” – கனடிய தமிழர் விழா

நடைமுறை கனடிய தமிழர் பேரவை நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டை பொது வெளியில் இந்த பத்தியாளர் கடந்த December முதல் பகிர்ந்து வந்துள்ளார். அந்த நிலைப்பாட்டில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை.

பொறுப்பற்ற முடிவுகளுக்கு பெறுபேற்று கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தலை இந்த பத்தியாளர் கடந்த January மாதம் கட்டுரையாக பகிர்ந்திருந்தார். கனடிய தமிழர் பேரவையின் தலைவர் ரவீனா ராஜசிங்கம், நிர்வாக இயக்குனர் டான்ரன் துரைராஜா, முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் உட்பட நிர்வாக,  இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருந்தது அந்த கட்டுரை.

(அந்தக் கட்டுரை முழுமையான)

கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!

முதலில்  இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி காரணமாக இயக்குனர் குழுவில் இருந்து துஷி ஜெயராஜ் பதவி விலகியிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த தவறுக்கு பெறுப்பேற்று  ஆலோசகர் சபையில் இருந்து ராஜ் தவரட்ணசிங்கம் விலகினார். ரவீனா ராஜசிங்கம், தனது எதிர்கால அரசியலை காரணம் காட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ஆனாலும் ஏனைய அனைவரும் தொடர்ந்தும் முடிவெடுக்கும் நிலையில் தான் உள்ளனர். இமாலய பிரகடனம், உலகத் தமிழர் பேரவையுடன் கூட்டு, இனப்படுகொலை குறித்த நிலைப்பாடு உள்ளிட்டவை இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்த முடிவுதான்.

கனடியத் தமிழர் கூட்டின் பங்கு!

இந்த முடிவுகள் தவறாகின், அதற்கு யார் பொறுப்பேற்பது? தவறான முடிவுகளை எடுத்தவர்கள் பதவி விலகுவது தான் அவற்றை திருத்துவதற்கான ஆரம்பமாக அமையும்?

கனடிய தமிழர் பேரவைக்கு எதிரான கண்டனம், நடவடிக்கைக்கான அழைப்புகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து உரத்து எதிரொலிக்கிறது. எனினும், நடவடிக்கை எடுக்காத தன்மை May மாத நடுப்பகுதிவரை CTC தரப்பில் நீடித்தது.

சமூகத்தின் கூட்டுப் பலம்!

சமூகத்தின் அனைத்து பிரிவினர்களிடமிருந்தும் நடவடிக்கைக்கான அழைப்புகள் தொடர்ந்தன. இதன் கூட்டுக் குரலாக கனடியத் தமிழர் கூட்டு உருவெடுத்தது. கனடாவில் இதுவரை காலமும் ஒரு விடயத்தில் இவ்வாறு ஒரு எதிர்ப்புக்குரல் பதிவானதில்லை.

ஊடகங்களின் சந்திப்பு, மக்கள் சந்திப்பு, மக்கள் பிரதிநிதிகளின் கூட்டுக் குரல் என கனடியத் தமிழர் கூட்டின் ஒவ்வொரு நகர்வும், கால ஓட்டத்துடன் சமூகம் தமது தவறுகளை எல்லாம் மறந்து விடும் என்ற பேரவையின் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டது.

Tamil Fest என்னும் பெரும் கனவு உடைந்து போவதை பேரவையில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் விரும்பவில்லை. அதனால் ஆரம்பமானது தமது தவறான நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்கும் அறிவித்தல் படலம். ஆனாலும் இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பு இதுவல்ல.

எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவான்?

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?  அம்பு தானாக வராது. யாரோ ஒருவரின் வில்லில் இருந்து தான் பாய்ந்திருக்க முடியும்.

இங்கே அம்பு – இமாலய பிரகடனம், உலகத் தமிழர் பேரவையுடன் கூட்டு, இனப்படுகொலை குறித்த நிலைப்பாடு – அவற்றை எய்தது  –  கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும்.

இன்றைய நிலையில் CTC ஒரு மேட்டிமைகள் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் வளர்ந்து நிற்பதற்கு காரணம் கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும்.

இந்த நிலையில் ஒரு அமைப்பாக CTC, கனடிய சமூகத்துக்கு செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள செயலாக அமையக்கூடியது பதவி விலகல் மாத்திரம்தான்.

சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத்தன்மை உள்ளவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்க வேண்டும்

ஒரு மேட்டிமைகள் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் CTC வளர்ந்தது நிற்பதற்கு இப்போது பொறுப்பில் உள்ள, முன்னர் பொறுப்பில் இருந்த அனைவரும் ஒருவகையில் காரணமானவர்களாகத்தான் உள்ளனர். தவிரவும் கனடிய தமிழர் பேரவையின் நாளாந்த செயற்பாட்டிற்கு நிதி பங்களிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் இதற்கு காரணமாகின்றனர்.

இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத ஒரு விடயம் – ஆனாலும் அதையும் சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கனடிய தமிழர் பேரவையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு வகையில் உள்ளது. அதற்காக அவர்கள் எறியும் எலும்பு துண்டுகள் தான் – இனப்படுகொலையை ஏற்றுக் கொள்ளல், உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து விலகல் போன்ற அறிவித்தல்கள்.

கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், நிர்வாக இயக்குனர் உட்பட தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும் பதவி விலகி, இவர்கள் அனைவரும் கனடிய தமிழர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக விலத்தி இருப்பதே சமூகத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்க முடியும்.

உண்மையான சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத்தன்மையை பேணக்கூடியவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்று முன் நகர வேண்டும். கனடிய தமிழர் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இதற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும். கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய தமிழர்களின் அமைப்பு. அது கனடிய தமிழர்களின் முழுமையான நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக இருப்பது அவசியம்.

இம்முறை Tamil Fest ஒரு “சமூகக் குழு” (Working Committee) தலைமையில் கனடிய தமிழர் விழாவாக நடைபெற வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. இன்றைய நிர்வாகம் தெருவிழாவை நடத்துவது கனடிய தமிழ் சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரும் பாதகம்!

தொடரும்!

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

கனடாவின் அதிக செலவு செய்யப்படும் தேர்தல்!

Gaya Raja

தமிழர்களை சந்தித்தார் Olivia Chow!

Lankathas Pathmanathan

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

Leave a Comment