தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!

கனடிய தமிழர் பேரவை – CTC – ஒரு மேட்டிமைகளின் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் வளர்ந்து நிற்பதற்கு யார் காரணம் என சிந்திக்கும் நிலை அண்மைய வருடங்களில் பல முறை தோன்றியுள்ளது.

இதற்கான காரணங்கள் பல.

கனடிய தமிழர் பேரவை, தமிழ் கனடியர்களின் குரலாக செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக தன்னை பொது வெளியில் இனம் காட்டுகிறது. ஆனால் CTC உண்மையில் கனடிய தமிழர்களின் குரலாக செயல்படும் ஒரு அமைப்பா அல்லது மூடிய அறைக்குள் முடிவுகளை எடுத்து விட்டு அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட மேட்டிமைகளின் அமைப்பா என்ற கேள்வி எழுவதற்கு பல காரணிகள் உள்ளன.

“தமிழ் கனடியர்களின் குரலாக” செயல்படுவது என்றால் “ஒரு சில உறுப்பினர்களின்” முடிவுகளை கனடிய தமிழர்களின் தலையில் இறக்கி வைக்க முடியாது என்பது அடிப்படை.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் (அல்லது பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும்) ஒரு அமைப்பு முன்னெடுக்கும் அனைத்து நகர்வுக்களிலும் சமூகம், அதன் விருப்பு வெறுப்புகள் மையமாக இருத்தல் அவசியம். அந்த அமைப்பு செய்த, செய்யும், செய்ய முனையும் அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புகளால் நிரூபிக்கப்பட வேண்டும். ஒரு சமூக அமைப்பு முன்னெடுக்கும் அனைத்து நகர்வுக்களிலும் வெளிப்படைத்தன்மையின் மிக உயர்ந்த தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

கனடிய தமிழர் பேரவைக்கும் இந்த அடிப்படை எதிர்பார்ப்புகள் பொருந்தும். ஆனாலும் இவற்றில் எந்த நடைமுறையும் கனடிய தமிழர் பேரவையினால் பின் பற்றப்படுவதில்லை என்பதை வெளிப்படையாக கூறமுடியும்.

எதற்கெடுத்தாலும் “நாங்கள் ஒரு உறுப்பினர்கள் அமைப்பு” என்ற நிலையான பதிலை அவர்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

“தமிழ் கனடியர்களின் குரலாக” செயல்படுவது என்றால் “ஒரு சில உறுப்பினர்களின்” முடிவுகளை கனடிய தமிழர்களின் தலையில் இறக்கி வைக்க முடியாது என்பது அடிப்படை.

 

CTC கனடிய அரசாங்கத்தின் முகத்தில் கரி பூசி உள்ளது

 

2023 ஆரம்பத்தில், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கை அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்து ஒரு அறிவித்தலை வெளியிட்டது.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கான உறுதியான செயல்பாடு இந்த தடை என கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly அந்த அறிவித்தல் வெளியான போது தெரிவித்திருந்தார்.

இது நடைபெற்று ஒரு வருடத்திற்குள் கனடாவை தளமாக கொண்டியங்கும் கனடிய தமிழர் பேரவை – CTC –  கனடிய மத்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்து இமாலயப் பிரகடனத்தின் பிரதியை கையளிக்கிறோம் என்ற பெயரில் கனடிய அரசாங்கத்தின் முகத்தில் கரி பூசி உள்ளது – அல்லது ராஜபக்ச சகோதர்களுக்கு வெள்ளை அடித்துள்ளது.

 

கனடிய மத்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுடன் கனடிய தமிழர் பேரவையின்  முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் ……

 

Global Tamil Forum – GTF – முன்னின்று நகர்த்தும் “இமாலயப் பிரகடனம்” பிரதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும் நிகழ்வில் கனடிய தமிழர் பேரவையின்  முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் பங்கேற்றதை CTC எவ்வாறு நியாயப்படுத்துகிறது?

இந்த முடிவுக்காக கனடிய தமிழர் பேரவை வெட்கித் தலைகுனிய வேண்டும்.

எமது மக்களின் இனப்படுகொலையின் பிரதான குற்றவாளியுடன் கனடிய தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் சந்திப்பா? இதை விட ஒரு அவமானம் கனடிய தமிழர்களும் ஏற்பட முடியுமா?

கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என்ற வெற்றுச் சொல்லை CTC இனியும் ஒரு சாக்காக பயன்படுத்தி ஒரு தனியார் அமைப்பை முன்நகர்த்த முடியாது – முன்நகர்த்த கூடாது.

 

கனடிய தமிழர் பேரவையின் நிலைப்பாட்டில் மாற்றாம் ஏற்பட காரணம் என்ன?

பல ஆண்டுகளாக கனடிய தமிழர் பேரவை – CTC – இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை கோரியதுடன் – ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கைகள் அடங்கிய பயணங்களை கனடிய தமிழர்களின் பிரதிநிதிகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அரங்கிற்கு பல முறை முன்னெடுத்தது.

இருந்த போதிலும் இந்த இனப்படுகொலைகளுக்கு முக்கிய பொறுப்பான நபரை சந்தித்து, அவருடன் புகைப்படங்களை எடுக்கும் அளவில் கனடிய தமிழர் பேரவையின் நிலைப்பாட்டில் மாற்றாம் ஏற்பட காரணம் என்ன என்ற கேள்வி கனடிய தமிழர்கள் மத்தியில் உள்ளது.

CTC முன்னெடுத்த இந்த பொறுப்பற்ற முடிவை தாயகம், கனடா, ஏனைய நாடுகள் என அரசியல் வேறுபாடின்றி பலரும் கண்டித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பையும், அவருக்கான அங்கீகாரத்தையும் ஒரு “துரோகம்” என கனடாவில் இருந்து தமிழ் கனடியர்கள் பலரும் CTC மீது தங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களில் கனடிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண பிரதி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான விஜய் தணிகாசலம், Ontario மாகாண சபை உறுபினர் லோகன் கணபதி, Toronto கல்விச்சபை உறுப்பினர் நீதன் சான், Toronto கல்விச்சபை உறுப்பினர் யாழினி ராஜகுலசிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி, CTC ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் இயக்குனருமான அபிமன்யு சிங்கம், கனடிய தமிழர் தேசிய அவையின் தலைவர் ஸ்ரீ ரஞ்சன், தமிழர் உரிமைக் குழுவின் பொதுச் செயலாளர் கற்பனா நாகேந்திரன் உட்பட பலரும் அடங்குகின்றனர்.

இவர்களின் கரிசனைக்கான கனடிய தமிழர் பேரவையின் பதில்தான் என்ன?

—-

இந்த பொறுப்பற்ற முடிவுக்கு பெறுபேற்று கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பதவி விலகவேண்டும் என்ற நிலை இப்போது தோன்றியுள்ளது.

இன்றைய நிலையில் ஒரு கனடிய தமிழனின் அடிப்படை எதிர்பார்ப்பு இதுதான்.

ஒரு மேட்டிமைகளின் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் CTC வளர்ந்தது நிற்பதற்கு இப்போது பொறுப்பில் உள்ள, முன்னர் பொறுப்பில் இருந்த அனைவரும் ஒருவகையில் காரணமானவர்களாகத்தான் உள்ளனர்.

ஒரு அமைப்பாக CTC கனடிய சமூகத்திற்கு செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள செயலாக அமையக்கூடியது பதவி விலகல் மாத்திரம்தான்.

ஒரு மேட்டிமைகளின் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் CTC வளர்ந்தது நிற்பதற்கு இப்போது பொறுப்பில் உள்ள, முன்னர் பொறுப்பில் இருந்த அனைவரும் ஒருவகையில் காரணமானவர்களாகத்தான் உள்ளனர். தவிரவும் கனடிய தமிழர் பேரவையில் நாளாந்த செயற்பாட்டிற்கு கிராமமாக நிதி பங்களிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் இதற்கு காரணமாகின்றனர்.

இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத ஒரு விடயம் – ஆனாலும் அதையும் சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கனடிய தமிழர் பேரவையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு வகையில் உள்ளது.

உண்மையான சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத் தன்மையை பேணக்கூடியவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்று முன்நகர வேண்டும்.

இந்த முடிவு குறித்து CTC தலைமை பெறுப்பில் உள்ளவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.

CTC சமூகத்தில் எஞ்சியிருக்கும் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற விரும்பினால், இந்த துரோகத்தை உடனடியாகச் சரி செய்ய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

1) இந்த முடிவுக்கு CTC கனடிய தமிழர்களிடமும் கனடிய அரசாங்கத்திடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

2)  கனடிய மத்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட  தமிழின படுகொலையாளரை அங்கீகரித்த தவறுக்கு பெறுப்பேற்று கனடிய தமிழர் பேரவையின் தலைவர் ரவீனா ராஜசிங்கம், நிர்வாக இயக்குனர் டான்டன் துரைராஜா, முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் உட்பட நிர்வாக,  இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகவேண்டும்.

தவிரவும் இவர்கள் அனைவரும் கனடிய தமிழர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக விலத்தி இருப்பதே சமூகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்க முடியும்.

உண்மையான சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத்தன்மையை பேணக்கூடியவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்று முன்நகர வேண்டும். கனடிய தமிழர் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இதற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.

நீங்கள் தமிழர் கனடியர்களின் குரல் அல்ல

நீங்கள் தமிழர் கனடியர்களின் குரல் அல்ல என்ற கசப்பான உண்மையை உங்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கடமை ஒரு கனடிய தமிழனாக எனக்கு உள்ளது.

தொடர் தவறுகள், அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை உப்பட பல காரணங்களால் தமிழர் கனடியர்களின் குரல் என்ற நிலையை நீண்ட காலத்திற்கு முன்னரே நீங்கள் இழந்துவிட்டீர்கள்.

உங்கள் அமைப்பை தமது குரலாக எத்தனை கனடியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் உள்ளதா?

உங்கள் நிர்வாக சபையையும், இயக்குநர்கள் குழுவையும் தெரிவு செய்யும் முறைமை தான் என்ன?

இறுதியாக உங்கள் நிர்வாக சபையையும், இயக்குநர்கள் குழுவையும் தெரிவு செய்யும் தேர்தல் எப்போது நடைபெற்றது?

இப்போது பதவியில் உள்ளவர்கள் எவ்வாறு, யாரால் தெரிவு செய்யப்பட்டனர்?

தமிழ் கனடியர்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்புக்கு ஜனநாயக முறையில் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவது அவசியம் இல்லையா?

புதிய நிர்வாக சபை, இயக்குநர்கள் குழுவிற்கான தேர்தல் செயல்முறை வெளிப்படையாகவும் ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும் என்ற அடைப்படை எதிர்பார்ப்பு கனடிய தமிழர்களிடம் இருப்பது தவறா?

கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய தமிழர்களின் அமைப்பு !

இது கனடிய தமிழர் பேரவையை களத்தில் இருந்து அகற்று ஒரு நகர்வாக மாறிவிடக் கூடாது – அல்லது இன்னுமொரு புதிய அமைப்பை உருவாக்க இதனை ஒரு காரணமாக்கிவிடல் ஆகாது.

கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய தமிழர்களின் அமைப்பு.

அது கனடிய தமிழர்களின் முழுமையான நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக இருப்பது அவசியம்.

அந்த மாற்றத்திற்கான ஆரம்பம் இந்த நொடியில் இருந்து ஆரம்பிக்கட்டும்

 

There is no peace without justice ! – நீதி இல்லாமல் அமைதி இல்லை !

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

கனடாவில் தமிழ் சமூக மையம் எதிர்பார்ப்பும் … கருத்துக்களும் … கேள்விகளும் …

thesiyam

தமிழர்களை சந்தித்தார் Olivia Chow!

Lankathas Pathmanathan

அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமான $123 ஆயிரம் நட்ட ஈடு தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment