தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை!

முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக – Crown-Indigenous Relations Minister – புதிதாக பதவியேற்ற Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, தனது முன்னோடிகள் தம் அமைப்புகள், சமுதாய உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகியோருடன் கொண்டிருந்த அணுகுமுறையில் இருந்து உத்வேகம் பெறுவார் என தாம் நம்புவதாக கனடாவின் முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பதவி விலகிச் செல்லும் முன்னாள் அமைச்சர் Marc Miller ‘’முன்மாதிரியான பணிகளை” முன்னெடுத்திருந்ததாக இறையாண்மை கொண்ட பழங்குடித் தேசங்களின் கூட்டமைப்பின் முதல் துணைத் தலைவர் David Pratt தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சருக்கும் அத்தகைய உந்துதலும் அர்த்தமுள்ள உறவுகளைக் கட்டியெழுப்பும் விருப்பமும்  இருப்பதாக தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு அமைச்சரவை மாற்றமும் சற்று ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், புதிய அமைச்சருடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னோக்கிச் செல்வதற்கும் தமது குழு எதிர்பார்ப்பதாக David Pratt குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரும் முதல்வர்களும் ஒன்றாக அமர்ந்து முதற்குடியின மக்கள் குறித்து முடிவெடுக்கும் நாட்கள் இன்றில்லை. எங்கள் உரிமைகள், எங்கள் நிலங்கள், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அனைத்து உரையாடல்களிலும் நாங்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் Justin Trudeauவின் அமைச்சரவை மீளமைப்பின் ஒரு பகுதியாக July மாத இறுதியில் பதவியேற்ற 7 புதிய அமைச்சர்களில் ஹரி ஆனந்தசங்கரியும் ஒருவர்.

மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹரி ஆனந்தசங்கரி முதன் முதலில் 2015 இல் Toronto பெரும்பாக்கத்தில் உள்ள Scarborough-Rouge Park தொகுதிக்கு பிரதிநிதியாக தெரிவானார்.

அவர் 2019 முதல் 2021 வரை முன்னாள் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக கடமையாற்றியதுடன், நாடாளுமன்ற அவையில் பழங்குடி, வடக்கு விவகாரக் குழுவில்
(Indigenous and northern affairs committee) 6 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரி முதன்முதலில் 2015 இல் Torontoவின் Scarborough-Rouge Park  தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

July மாதம் 26ஆம் திகதி அவர் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக பதவியேற்றார். இதற்கு முன்னதாக Marc Miller அப்பதவியை வகித்தார்.

முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி கடமையாற்றியுள்ளதுடன், நீதி (justice), மரபுரிமை (heritage) அமைச்சர்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் பிறந்த அவர் 1983 இல் தனது தாயுடன் கனடா வந்தடைந்தார். ஹரி ஆனந்தசங்கரி Ottawaவில் உள்ள Carleton  பல்கலைக்கழகத்திலும் , Torontoவில் உள்ள Osgoode Hall Law School-இலும்  பட்டம் பெற்றுள்ளார்.

அவர் வணிகம், வீட்டுமனை வர்த்தகம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சட்ட நிறுவனத்தை  Scarboroughவில் நிர்வகித்தார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் Lawyers’ Rights Watch Canada என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் தமிழ் சமூக அமைப்புகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த March மாதம், ஹரி ஆனந்தசங்கரி இலங்கை குறித்து தெரிவித்த  “தோல்வியடைந்த, திவாலான அரசு”  (“a failed and bankrupt state”) என்ற கருத்துக்களுக்காக செய்திகளில் பேசப்பட்டார்.

2021 முதல் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக அமைச்சராக பணியாற்றிய Marc Miller, குடிவரவு அமைச்சராக புதிய பொறுப்பை ஏற்கிறார்.

Metis National Council -இன் தலைவர் Cassidy Caron, Pratt-இன்  கருத்துக்களை பிரதிபலித்துள்ளார். புதிய அமைச்சர் முந்தைய அனுபவங்கள் காரணமாக தனது பணியை நன்கு அறிந்தவர் என அவர் கூறியுள்ளார். புதிய அமைச்சரில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் Cassidy Caron குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்த விடயத்தில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் தொடர்பான புதிய ஜனனாயாக கட்சியின் விமர்சகர், Lori Idlout, இதே நம்பிக்கையை பிரதிபலிக்கவில்லை.

Inuit, முதற்குடித் தேசிய இனங்கள் (First Nations), Metis மக்களுக்கு அரசாங்கம் இதுவரை வழங்கிய  “பல வாக்குறுதிகள்” மீறப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முதற்குடி மக்களின் உரிமைகள், உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவின் (Indigenous Peoples and the Truth and Reconciliation Commission) செயற்பாட்டிற்கான அழைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை அரசாங்கம் “மெதுவாக” செயல்படுத்துவதற்கு மேலதிகமாக, தற்போதைய வீட்டு நெருக்கடிகள், உட்கட்டமைப்பு போதாமைகளையும் Lori Idlout மேற்கோள் காட்டியுள்ளார்.

முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது மேம்பாடுகளை நோக்கிய மாற்றங்களை கண்டிப்பாகக் காண வேண்டும் என Lori Idlout வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு மகத்தான பணி ஒன்று உள்ளதாகக் கூறியுள்ள The Assembly of Manitoba Chiefs, அமைச்சரவை மாற்றத்தால் விரக்தியடைந்துள்ளதாகவும், ஆனாலும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் 62 முதற்குடித் தேசங்கள் (First Nations) எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஹரி ஆனந்தசங்கரியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

“அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி எங்களுக்கு உதவுவார் என்றும் ஒரு நண்பராக இருப்பார் என்றும் நாங்கள் நம்புகிறோம் … மேலும் Prairie Green Landfill, Brady Landfill-இல் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களை அடையாளம் காண உதவுவார்” என Grand Chief Cathy Merrick கூறியுள்ளார்.

Manitoba முதல்வர் Heather Stefanson, மாகாண அரசு அடையாளம் காணப்படாத புதைகுழிகளில் தேடுதல் மேற்கொள்வதை  ஆதரிக்காது என கூறியிருந்தார்.  Winnipeg நகருக்கு அருகிலுள்ள நிலநிரப்பு பகுதியில் இருப்பதாக நம்பப்படும் கொலை செய்யப்பட்ட இரண்டு  பூர்வகுடி பெண்களின் உடல்களை மீட்க உதவுவதாக அமைச்சர் Marc Miller முன்னர் உறுதியளித்திருந்தார்.

இந்த விடயத்தில் Manitoba அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பீர்களா என பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்கள் ஹரி ஆனந்தசங்கரியிடம் வினவினர். இதனை ஒரு நெஞ்சை உலுக்கும் விடயம் எனவும் தான் அதை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
“நான் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுடன், குறிப்பாக குடும்பங்களுடன் தொடர்பு கொள்வேன், மேலும் அவர்கள்  சரியானதென கருதும் ஒரு தீர்வை நாங்கள் வழங்குவதை உறுதி செய்வேன்’’ (“I will engage with those who are directly impacted, particularly the families, and ensure we have a solution they feel is appropriate”) என என ஹரி ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

அதே செய்தியாளர் சந்திப்பில், இந்த அமைச்சு பதவியில் இருந்து விலகுவது வருத்தமளிப்பதாகவும், பழங்குடித் தலைவர்கள், சமூக உறுப்பினர்களுடன் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய உறவுகள் குறிப்பாக தனக்கு மிகவும் அர்த்தமுள்ளவை எனவும் Marc Miller கூறியுள்ளார்.

“(ஹரி ஆனந்தசங்கரி) இதை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என நான் நம்புகிறேன்”, (“I trust (Anandasangaree) will be able to take this over successfully”) என Marc Miller கூறியுள்ளார்.

அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுடனும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர்களுடனும்  இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் Inuit மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் Inuit Tapiriit Kanatami கூறியுள்ளார்.
முதற்குடி சமூகங்கள் பல விழாக்களையும் ஒன்றுகூடலையும் நடத்தும் நேரத்தில், இந்த கோடை காலத்தில், ஹரி ஆனந்தசங்கரி தனது கருத்துக்களுக்கேற்ப செயலாற்றுவதை காண விரும்புவதாக முதற்குடிகள் தலைமையிலான கொள்கை, அரச உறவுகள் நிறுவனமான Warshield-இன் தலைமை செயல் அதிகாரியான Max FineDay தெரிவித்துள்ளார்.

முதற்குடித் தேசிய இனங்கள் தங்களின் ஆதரவை அமைச்சரை நோக்கி நீட்டியுள்ளதாகவும் அவர்களின் கைகளை அவர் பற்றிக் கொள்வார் என நம்புவதாகவும் Max FineDay மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம் Alessia Passafiume (The Canadian Press)
தமிழில் Bella Dalima

Related posts

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை பகிரங்கமாக வெளிப்படுத்திய Longueuil நகர முதல்வர்

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

2020: கனடிய அரசியல் நிலை என்ன?

Gaya Raja

Leave a Comment