Niger அரசாங்கத்திற்கான நேரடி அபிவிருத்தி உதவிகளை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாட்டில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நேரடி நிதி உதவியை நிறுத்துவதாக கனடா சனிக்கிழமை அறிவித்தது.
இன்றைய சூழலில், Niger அரசாங்கத்திற்கு நேரடி ஆதரவை வழங்குவது சாத்தியமற்றது என கனடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
Niger அரசாங்கத்திற்கான கனடாவின் நிதி உதவியானது 2026ஆம் ஆண்டிற்குள் வருடத்திற்கு 10 மில்லியன் டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
2021-2022 க்கு இடையில், கனடிய அரசாங்கம் Niger அரசாங்கத்திற்கு 2.71 மில்லியன் டொலர்களை விநியோகித்துள்ளது.
Niger அரசாங்கத்திற்கான நேரடி உதவியை மாத்திரம் கனடிய அரசாங்கம் நிறுத்துகிறது
இருப்பினும், அங்குள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், பாலின சமத்துவ உதவிகளை தொடர்ந்து வழங்க கனடா திட்டமிட்டுள்ளது.
Nigerரில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றும் செயல்முறையை சில நாடுகள் ஆரம்பித்துள்ளது
ஆனாலும் அதுபோன்ற நகர்வை மேற்கொள்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என கனடிய மத்திய அரசு புதன்கிழமை (02) கூறியிருந்தது.
இதுவரை, 269 பேர் Nigerரில் இருப்பதாக கனடிய அரசின் வெளிநாட்டில் உள்ள குடிமக்களின் தரவுத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர்.
July 26 ஆரம்பித்த ஆட்சிக் கவிழ்ப்பு, சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது
அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoumமை பதவியில் இருந்து விலத்தியுள்ளதாக இராணுவத்தின் ஒரு பகுதியினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் “சதிப்புரட்சிக்கு காரணமானவர்கள், ஜனாதிபதி Mohamed Bazoum, அவரது குடும்பத்தினரை விடுதலை செய்யவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுக்கவும் அழைப்பு விடுக்கிறோம்,” என கனடிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.