புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கவோ பழைய கடவுச்சீட்டைப் புதுப்பிக்கவோ வேண்டாம் என கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சர் Karina Gould இந்த ஆலோசனையை வெளியிட்டார்.
நாடளாவிய ரீதியில் 155,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சரின் இந்த ஆலோசனை வெளியானது.
பொதுவாக ஒரு நாளில், நாடு முழுவதும் சுமார் 20,000 முதல் 25,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆனாலும் வேலை நிறுத்தம் ஆரம்பித்த போது அத்தியாவசியமாகக் கருதப்பட்ட 500 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மட்டுமே புதன்கிழமை (19) பரிசீலிக்கப்பட்டன.
கனடாவின் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (23) ஐந்தாவது நாளாக தொடர்கிறது.