Toronto நகர முதல்வர் John Toryக்கு எதிராக Toronto நேர்மை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
முன்னாள் கல்விச் சபை உறுப்பினரும் Scarborough தென்மேற்கு தொகுதியின் நகரசபை உறுப்பினர் வேட்பாளருமான பார்த்தி கந்தவேல் இந்த புகாரை அளித்துள்ளார்.
தனது தொகுதியில் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த நகர முதல்வராக தனது அதிகாரத்தை Tory பயன்படுத்தியதாக இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் நாளன்று 20ஆவது தொகுதி வாக்காளர்களுக்கு robocalls எனப்படும் தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டன.
Scarborough தென்மேற்கு தொகுதியின் நகரசபை உறுப்பினர் Gary Crawfordக்கு ஆதரவு வழங்குவதாக இந்த தொலைபேசி அழைப்பில் John Tory தெரிவித்திருந்தார்.
இந்த அழைப்பில் தன்னை “நகர முதல்வர் வேட்பாளர் John Tory ” என்று குறிப்பிடாமல் “நகர முதல்வர் John Tory” என்று குறிப்பிட்டதாக தனது புகாரில் பார்த்தி கந்தவேல் குறிப்பிட்டிருந்தார்.
Scarborough தென்மேற்கு தொகுதியை இந்தத் தேர்தலில் மீண்டும் Crawford வெற்றி பெற்றிருந்தார்.
ஆனாலும் அவருக்கும் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்ற பார்த்தி கந்தவேலுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்ததாகும்.
தனது புகார் தேர்தலின் முடிவுகள் குறித்ததல்ல என கூறிய பார்த்தி கந்தவேல், மாறாக Torontoவின் உள்ளூர் ஜனநாயகம், பொது அதிகாரிகளின் நேர்மை பற்றியது என தெரிவித்தார்
தனது அலுவலகம் புகாரைப் பெற்றதை உறுதிப்படுத்திய நேர்மை ஆணையர், இதை விசாரிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்
இந்த புகாரின் நகலும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக நகர முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேர்மை ஆணையர், அவரது செயல்முறையை நகர முதல்வர் மதிப்பதாக கூறும் நகர முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர், இதை கருத்தில் கொண்டு மேலும் கருத்துகளை வெளியிடப் போவதில்லை என தெரிவித்தார்.