December 12, 2024
தேசியம்
Ontario தேர்தல் 2022கட்டுரைகள்

Doug Ford, தமிழர் போராட்டம் விற்பனைக்கல்ல!

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்திற்கான Conservative கட்சியின் ஆதரவானது மேலோட்டமானதாக மாறும் நிலையில், அவர்களின் பாதகமான COVID கால கொள்கைகள் சமூகத்தை பாதிக்கின்றன.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் நிகழ்ந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்த Toronto தமிழ் சமூகத்தின் பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அந்த ஆண்டு அன்னையர் தினத்தன்று, இரவு முழுவதும் எறிகணைத் தாக்குதலால் ஒரே இரவில் ஏறக்குறைய 1,000 பேர் கொல்லப்பட்டனர் என்ற பயங்கரமான செய்தியுடன் நான் கண் விழித்தது நினைவிருக்கிறது. மெழுகுவர்த்தி ஏந்தி, கடிதம் எழுதி பிரசாரங்கள் மேற்கொண்டு, மனுக்களை கையளித்து பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு, தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் அதிகரித்து வரும் இனப்படுகொலை மீது உலகின் கவனத்தை திருப்பமுடியும் என்பதில் நம்பிக்கை இழந்த உணர்வுடன் இருந்தோம்.

அந்த நாளின் பிற்பகுதியில், ஆயிரக்கணக்கானோர் Gardiner அதிவேக சாலையை (Expressway) ஆக்கிரமித்தோம். இது நமது சமூக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்.

“பயங்கரவாதத்தை” ஒழிப்பதற்கான அதன் பிரசாரத்தில், இலங்கை அரசு எதையும் விட்டுவைக்கவில்லை. நோயாளிகளும் காயமடைந்தவர்களும் நிறைந்த மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மீதும் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்பட்டன. உணவு விநியோக வரிசைகள் மீது மீண்டும் மீண்டும் எறிகணைகள் வீசப்பட்டன. தாக்குதல் நடத்த தடை விதிக்கப்பட்ட, ‘no-fire zones’ என அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிரம்பியிருந்த இடங்கள் கூட தரை, வான் மார்க்கமாக கண்மூடித்தனமான தாக்கப்பட்டன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, 2009 போரின் இறுதிக் கட்டங்கள் மிகவும் பரிச்சயமான ஒரு வடிவத்திற்குள் பொருந்தும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, 2009 போரின் இறுதிக் கட்டங்கள் மிகவும் பரிச்சயமான ஒரு வடிவத்திற்குள் பொருந்தும். படுகொலைகள், பொருளாதாரத் தடைகள், கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள், பாரபட்சமான கொள்கைகள், 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து நமது மக்களைப் பேயாக ஆட்டிப்படைத்த தமிழர் நில அபகரிப்பு என்பவற்றை உள்ளடக்கிய ஒரு நீடித்த இனப்படுகொலை ஆகியவற்றைக் கொண்ட ஒரு வடிவமே அது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று January முதல் May 2009 வரை 40,000 முதல் 75,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 147,000 பேருக்கு என்ன நடத்ததென தெரியவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்தின் சொந்த தரவுகள் வௌிப்படுத்துகின்றன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்களா, காயமடைந்தார்களா அல்லது இறந்தார்களா என்பது யாருக்கும் தெரியாது.

“இனப்படுகொலை” என்ற சொல் ஏன் நம் சமூகத்தில் இவ்வளவு பொருளைக் கொண்டுள்ளது என்பதை இது போன்ற தரவுகள் விளக்குகின்றன. எங்கள் பல தசாப்த கால அனுபவத்தை விபரிக்கும் ஒரே வார்த்தை இது.

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் மசோதா கடந்த ஆண்டு கையெழுத்தானது.

ஒவ்வொரு ஆண்டும் May 11 முதல் 18 வரை தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் (Tamil Genocide Education Week) கடைப்பிடிக்கப்படுவதை அறிவிக்கும் 104 சட்டமூலத்திற்கு (Bill 104) Ontario சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் கடந்த ஆண்டு ஆதரவாக வாக்களித்த போது, நமது சமூகம் மகிழ்சியும் நிம்மதியும் அடைந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு தசாப்தத்திற்கும் மேலானாலும், இந்த மைல்கல் இறுதியாக 2009 இல் நாங்கள் கூறியதை சட்டப்பூர்வமாக்கியதுடன், எங்கள் மன வேதனைக்கும் துன்பத்திற்கும் தேசிய விடுதலைக்கான போராட்டத்திற்கும் ஒர் ஏற்பினை வழங்கியது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான அங்கீகாரமானது, நமது சமூகம் தன்னைத் தேற்றிக்கொள்ளும் முயற்சியில் ஓர் இன்றியமையாத படியாகவும், நமது போராட்டம் தமிழர் அல்லாத நண்பர்களுக்கு முக்கியமானது என்பதை உணர்த்தும் ஒரு குறிகாட்டியாகவும் இருந்தது.

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்திற்கான மசோதாவை சமர்ப்பித்த Scarborough-Rouge Park மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம்

எல்லோரும் எங்களுக்கு திரண்டு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பது தான் கவலைக்குரியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை அமைப்புகளின் கூட்டமைப்பானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்திற்கு எதிராக அரசியலமைப்பு சார்ந்த சவாலினை விடுத்தது. எங்கள் அனுபவத்தை விபரிக்க “இனப்படுகொலை” என்ற வார்த்தையைப் பயன்படுத்த Ontarioவிற்கு நியாயாதிக்கம் இல்லை என்று வாதிட்டது.

May 24, 25 திகதிகளில், Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் ஒரு விசாரணை நடந்தது. மாகாண சட்டவாக்கம் மீதான எந்தவொரு சவாலிலும், சட்டமா அதிபர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

இனப்படுகொலையை Ontario உண்மையில் அங்கீகரிக்கவில்லை – அரசாங்க வழக்கறிஞர்கள்

இனப்படுகொலையை Ontario உண்மையில் அங்கீகரிக்கவில்லை என்றும் இனப்படுகொலை என்ற வார்த்தை சட்டத்தின் முன்னுரையில் மாத்திரமே உள்ளதால், அது சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் அறிவித்ததைக் கேட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கற்பனை செய்து பாருங்கள்.

May 2009 நிகழ்வுகளுக்கும் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தின் காலப்பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை அரசதரப்பு வழக்கறிஞர் நிராகரிக்க முயன்றார்.

விடயங்களை இன்னும் மோசமாக்கும் வகையில், ”ஒரு வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பெயர் சூட்டப்பட்டது” எனக் கூறியதன் மூலம், இது முற்றிலும் எழுந்தமானமாக (அத்துடன் அர்த்தமற்றதுமாக) மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பதுபோல், May 2009 நிகழ்வுகளுக்கும் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தின் காலப்பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை அரசதரப்பு வழக்கறிஞர் நிராகரிக்க முயன்றார்.

எங்கள் சமூகத்தில், May 11 முதல் 18 வரையான நாட்கள் என்பது வெறுமனே ஒரு வாரம் மட்டுமல்ல. கடந்த 13 ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் May 18ஐ அண்மிக்கும் நாட்களில் தமிழ் இனப்படுகொலையை நினைவு கூர்கின்றனர். இது நமது நாட்காட்டிகளில் ஒரு வேதனையானதும் குறியீட்டுத் தன்மை கொண்டதுமான ஒரு திகதியாகும்.

சட்டமா அதிபர் அலுவலகம் இந்த வாதத்தை முன்வைப்பது சட்டப்பூர்வமாக விவேகமானதாக இருந்தாலும், எங்கள் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு அதன் அர்த்தத்தை இலகுவில் பிரித்துவிட முடியாது. இலங்கையில் மனித உரிமைகள் பற்றிய எந்தவொரு பகிரங்க விவாதத்திலும் இனப்படுகொலையை மறுக்க முடியாத யதார்த்தமாக மாற்ற பல வருட செயற்பாடுகள் மூலம் உதவி அதே நபர்களுக்குத் தான் தேர்தல் பிரசாரத்தின் போது இவ் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

Conservative வேட்பாளர்கள் தமிழ் சமூக உறுப்பினர்களின் வீட்டு வாசலுக்கு சென்று திரும்பத் திரும்ப எதைச் சொன்னாலும், 13 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சமூகம் தாங்கிக்கொண்ட விடயங்களை மாகாண அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

எங்கள் சமூகம் காது கொடுக்கவில்லை என நினைத்துக் கொண்டு, அரசாங்கம் என்ன சொல்கிறது என்பது தான் முக்கியமானது. ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம், எங்கள் காதுகளை அடைந்த செய்தி எம் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் போது, Conservative வேட்பாளர்கள் கடந்த நான்கு வருடங்களாக தங்கள் கட்சி செய்தவற்றைக் குறித்து மௌனம் காக்கின்றனர். குறைந்தபட்ச ஊதியத்தின் அதிக விகிதம், தொழிற்சங்கத்தில் இணைக்கப்படாத தொழிலாளர்கள், நோய்வாய்ப்பட்ட நாட்களில் சம்பளம் பெற முடியாதவர்கள் ஆகியோருடன் நாங்கள் போராடிக்கொண்டிருப்பதால், COVID-19 எங்கள் சமூகத்தை கடுமையாக பாதித்தது. பெருந்தொற்றின் போது முன்களப் பணியில் ஈடுபட்டு சுகயீனமுற்றபோதும், 15 டொலர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை இரத்துசெய்தல், ஒழுக்கமான வேலைச் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், நோய்வாய்ப்பட்ட நாட்களுக்கு ஊதியம் வழங்குவதை நீக்குதல் போன்ற Fordடின் தீர்மானத்தை பலரும் அமைதியாக சகித்துக்கொண்டனர்.

இனப்படுகொலையை ஊர்ஜிதம் செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டதால் அவர்கள் அவரை மன்னிக்கத் தயாராக இருந்தனர். அந்த அங்கீகாரம் வேறு எதனையும் விட மிகவும் முக்கியமானது. ஆனால் எங்கள் முகத்திற்கு முன்னால் ஒன்றைச் சொல்லிவிட்டு பின்பு முதுகுக்குப் பின்னால் அதை மறுத்துவிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே Ford உண்மையில் நினைக்கிறார் என்பதை இப்போது, ஒரு தேர்தலுக்கு முன்னதாக, நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம்.

Ontarioவில் உள்ள புலம்பெயர்ந்தோரில் தமிழர்களும் மிக முக்கியமானவர்கள்.

Ontarioவில் உள்ள புலம்பெயர்ந்தோரில் தமிழர்களும் மிக முக்கியமானவர்கள். 300,000க்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், இனப்படுகொலை என்பது எங்கள் உள்ளார்ந்த விடயம். வாக்களிப்பின் போது, மலிவான வாக்குகளுக்காக சந்தர்ப்பவாதமாக அதனை மலினப்படுத்திவிடக் கூடாது.

எங்களின் போராட்டம் விற்பனைக்கல்ல.

கிருஷ்ணா சரவணமுத்து

Related posts

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Lankathas Pathmanathan

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

Ontario மாகாண தேர்தல் பிரச்சார வரவு செலவு திட்டம் வெளியீடு

Leave a Comment