Ontario மாகாண சபையை கலைப்பதற்கான ஆலோசனையை மாகாண ஆளுநர் செவ்வாய்க்கிழமை (03) ஏற்றுக் கொண்ட நிலையில் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாக உள்ளது.
மாகாண சபையை கலைப்பதற்கான முதல்வர் Doug Fordஇன் ஆலோசனையை மாகாண ஆளுநர் Elizabeth Dowdeswell ஏற்றுக் கொண்டார்.
இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை ஆரம்பிக்க உள்ளது.
June மாதம் 2ஆம் திகதியை தேர்தல் தினமாக மாகாண ஆளுநர் முறைப்படி அறிவித்தார்.
செவ்வாய் மாலை மாகாண ஆளுநரை சந்தித்த முதல்வர் Ford இதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.
Ontario மாகாண அரசியல்வாதிகள் ஏற்கனவே பல வாரங்களாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மூன்று பெரிய கட்சிகளில் இரண்டு தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலையில் கருத்துக் கணிப்புகள் Fordஇன் Progressive Conservative கட்சி, மீண்டும் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் என எதிர்வு கூறுகின்றது.
தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள Liberal கட்சி, NDPயை பின்னிலை படுத்தி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
இதற்கிடையில், குடியிருப்பாளர்களை முன்கூட்டியே வாக்களிக்குமாறு Election Ontario ஊக்குவிக்கிறது.
COVID தொற்றுக்கு மத்தியில் வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.