கனேடிய ஆயுதப்படைக்கு அதிகமான பணியாளர்களை ஈர்க்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சர்வதேச ஆபத்தின் மத்தியில் கனடா தனது பாதுகாப்பு மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
Ottawaவில் நடைபெற்ற மூன்று நாள் பாதுகாப்பு மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்து கொண்ட அமைச்சர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குறித்து உரையாற்றினார்.
கடந்த இரண்டு வாரங்களின் நிகழ்வுகள் கனடா தனது பாதுகாப்பு மூலோபாயத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை நாங்கள் எதிர் கொள்கிறோம், என அமைச்சர் ஆனந்த் கூறினார்.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு கனடாவின் இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது என இந்த மாநாட்டில் பேசிய கனடாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் Gen. Wayne Eyre தெரிவித்தார்.
கனடாவின் வடக்கில் ரஷ்ய படையெடுப்பு அச்சுறுத்தல் மிகக் குறைவானது என தெரிவித்த அவர், இந்த நிலை எதிர்வரும் தசாப்தங்களில் மாறக்கூடும் என எச்சரித்தார்.