தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்கனடா மூர்த்தி

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

கனடாவில் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமாதான காலத்தில் – பயங்கரவாதம், போர்க் கெடுபிடிகள் இல்லாத நிலையில் – கனடா   மத்திய அரசாங்கத்தால் முதன்முறையாக  Federal Emergencies Act அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.   காரணம்? கனடாவில் கொரோனா கெடுபிடிகளை தளர்த்தக் கோரி செய்யப்பட்டுவரும் “Freedom Convoy 2022” முற்றுகைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவசர காலச் சட்டத்தை அமுலாக்கியிருக்கிறார் கனடாப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ… சரியான முடிவு.

கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக அவசர காலச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுமளவிற்குக் கொண்டு வந்து விட்டும்விட்டது

“பாரச் சரக்குக் காவிச் செல்லும் கனரக வண்டிகள் ஒட்டுனர்கள்” (சுருக்கமாக சொன்னால் ட்ரக் ட்ரைவேர்ஸ்-Truck Drivers) முன்னெடுக்கும் இந்த “Freedom Convoy 2022” முற்றுகைப் போராட்டம் கடந்த ஜனவரி 15ம் திகதியளவில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதமளவிற்கு தொடர்ந்து நடந்து வருகிறது! இந்த போராட்டத்தை நெறிப்படுத்துபவர் யார் என்பது குறித்த தெளிவு பொதுப்பரப்பில் வருவதற்கு முன்னர் அது ஒரு தேசியப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக அவசர காலச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுமளவிற்குக் கொண்டு வந்து விட்டும்விட்டது

இந்த முற்றுகைப் போராட்டத்தின் “மக்களுக்கான தேவை”தான் என்ன? அதை புரிந்து கொள்ளவே முடிவதாயில்லை. “அவசர அவசரமாக அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும்  உடனே நீக்க வேண்டுமாம்” நடக்கிற காரியமா இது? நோய்ப் பரவல் கட்டுப்பாடுகளை நீங்குவதென்பது சுகாதாரத்துறை வல்லுனர்கள் எடுக்க வேண்டிய  முடிவு அல்லவா?

” ஜஸ்ரின் ட்ரூடோவின் அரசாங்கத்தை கவிழ்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கமா?”  என்ற சந்தேகமும் வராமலில்லை.

போராட்டக்காரர்கள் – கிட்டத்தட்ட முன்னாள் ட்ரம்ப் ஆதரவாளர்களின் மனோ நிலையில் தம்மை வெளிக்காட்டியவாறு – நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் எண்ணப்பாட்டுடன் இயங்குகிறார்களோ என்றும் செய்திகளை பார்க்கும்போது தோன்றுகிறது.  போராட்ட பதாகைளில் சிலவற்றைப் பார்க்கும்போது ” ஜஸ்ரின் ட்ரூடோவின் அரசாங்கத்தை கவிழ்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கமா?”  என்ற சந்தேகமும் வராமலில்லை. போராட்டத்தால் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவின் இயல்புநிலை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

போராட்டத்தின் பகுதியாக அரசாங்கத்தை மிரட்ட பொருளியல் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இது தவறாகும்.  மூன்று இடங்களில் அமெரிக்காவுடனான போக்குவரத்துப் பாதையை “Freedom Convoy 2022” போராட்டக்காரர்கள் முடக்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்றான Windsor to Detroit பாதை மட்டும் தினசரி 400 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள வியாபாரப் போக்குவரத்தை அமெரிக்காவிற்கும் கனடாவிற்குமிடையே நடத்துகிறது. அலைபாய்வதுபோல போக்குவரத்து நடக்கும் பாதையல்லவா அது? அது தடைப்பட்டிருப்பது தகுமோ.. முறையோ.. தர்மம்தானோ.? பில்லியன் டொலர் கணக்கில் பொருளாதான இழப்புக்கள் இதன்மூலம் ஏற்படுகிறது – ஆனால் அதைப்பற்றிய கவலை ஏதுமில்லாமல் போக்குவரத்துத் தடைப் போராட்டத்தை தொடர்ந்து அரசாங்கத்தை பணியவைக்கலாம் என்று “Freedom Convoy 2022” போராட்டக்காரர்கள் கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

Tamil protesters block the Gardiner Expressway, a major freeway going through the middle of downtown Toronto May 10, 2009, to protest the conflict between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Elam (LTTE).      REUTERS/Mark Blinch (CANADA CONFLICT POLITICS)

இந்தவகை போக்குவரத்துத் தடைப் போராட்டத்தின் முன்னோடிகள் தமிழர்கள் தானோ தெரியவில்லை. 2009ம் ஆண்டு Gardiner விரைவுச் சாலையை முடக்கி நமது தமிழ்க் கனடியர்கள் செய்த வீதிமறிப்புப் போராட்டம்தான் இப்போது வேறு பரிணாமத்தில்  “Freedom Convoy” என்ற பெயரில் நடக்கிறதோ.. தமிழர்கள்தான் உலகிற்கே வழி காட்டியிருக்கிறோமோ?

கனடா போன்ற அமைதி அரசியல் நடக்குமிடத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி அமைதியின் சமநிலையை குழப்பும் வகையில் போராட்ட நிலவரம் தென்படுகிறது.  அல்பேட்டாவில் பெருமளவு ஆயுதங்களை போராட்டக்காரர்கள் வைத்திருந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு கனடாவின் போராட்டத்தை முன்மாதிரியாக எடுத்து வேறு பல நாடுகளிலும் இதே போன்ற கொரோனா எதிர்ப்புப் போராட்டங்கள் முளைவிடுகின்றன என்பது கூடுதல் செய்தி.

(இந்தவகை போக்குவரத்துத் தடைப் போராட்டத்தின் முன்னோடிகள் தமிழர்கள் தானோ தெரியவில்லை. 2009ம் ஆண்டு Gardiner விரைவுச் சாலையை முடக்கி நமது தமிழ்க் கனடியர்கள் செய்த வீதிமறிப்புப் போராட்டம்தான் இப்போது வேறு பரிணாமத்தில்  “Freedom Convoy” என்ற பெயரில் நடக்கிறதோ.. தமிழர்கள்தான் உலகிற்கே வழி காட்டியிருக்கிறோமோ? )

Freedom Convoy  “சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டம்” என போராட்டக்காரர்கள் அழைத்தாலும், அதிலிருப்பது ‘சுதந்திரம்’ அல்ல.. “தந்திரம்”. என்பதை முதலில் புரிந்து கொண்டு ட்ரூடோவைவிட உறுதியான நிலைப்பாட்டில் இயங்குகிறார் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட்!  மாகாண அளவில் புரோகிறசிவ் கன்ஸவேடிவ் கட்சித் தலைவராக இருந்தும் மத்திய அரசு நிலை கன்ஸவேடிவ் கட்சித் தலைவர்கள்போல அவர் பம்மவில்லை. சிலவேளை தனது வாக்கு வங்கியில் பாதிப்பு வரும் என்பது தெரிந்தும், போராட்டக்காரர்களில் பலரும் கொன்சவேடிவ் கட்சி ஆதரவாளர்களாக இருக்கலாம் என்பது புரிந்தும் (சில மாதங்களில் தேர்தல் வேறு வருகிறது) போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை முதலில் எடுத்து “ஒரு உறுதிமிக்க தலைவர்” என்பதை அவர்தான் முதலில் நிரூபித்தார்..(நீ  டக் போர்ட் அல்லடா செல்லம்…   “ட்ரக்” போர்ட் ) அதன்பின்னரே லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்ரின் ட்ரூடோவும் தனது வழக்கமான ‘வழவழா கொழகொழா’ நிலைப்பாட்டிலிருந்து மாறி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அவசர காலச் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்.

2020 கொரோனா பரவல் ஆரம்பித்த பின்னர் விரும்பியோ விரும்பாமலோ ஒரு புதிய உலக ஒழுங்கிற்குள் நாம் மாட்டியிருக்கிறோம்.

“மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றுதானே போராட்டக்காரர்கள் இயங்குகிறார்கள் – ஆதலால் அவர்களை நாம் பாராட்ட அல்லவா வேண்டும்” என்றும் சிலர் கருதுகிறார்கள்.  2020 கொரோனா பரவல் ஆரம்பித்த பின்னர் விரும்பியோ விரும்பாமலோ ஒரு புதிய உலக ஒழுங்கிற்குள் நாம் மாட்டியிருக்கிறோம்.  நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ “கொரோனா போன்ற உயிர் கொல்லிப் பரவல்கள்  மனிதகுலத்தை தாக்கினால் என்ன செய்ய வேண்டும்?” என்பதை trial & error மூலம் முழு உலகும் கற்றுக் கொண்டு வருகிறது.

“பயணம் செய்பவர்களால்தான் கொரோனா பரவியது” என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் மேலதிக பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள்கள் மட்டுமல்ல, பயணக் கட்டுப்பாடுகளும் அவசியம்தான்! சுகாதார வல்லுனர்கள் தீர்க்கமாக சொல்லும்வரை அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  வேலையிழப்புக்கள் ஏற்படுகின்றன என்பதும் உண்மைதான்.. அதற்காக “பாரச் சரக்குக் காவிச் செல்லும் கனரக வண்டிகள் ஒட்டுனர்கள்” அதாவது டரக் ட்ரைவேர்ஸ் ஒன்றும் அதிவிசேட மானுடப்பிறவிகள் அல்லர். அவர்களும் மற்றவர்கள் போலவே.. பாராட்டுமளவிற்கு அங்கு ஒன்றும் இல்லை.. அவர்களது பொது நலனில் ‘சுயநலன்’ தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் கனடாவில் அவசர காலச் சட்டம் பிரகடனமாகியிருப்பதை வரவேற்க வேண்டியுமுள்ளது. “இது தகும்.. முறை.. தர்மம்தான்…”

கனடா மூர்த்தி

Related posts

மனைவியை ‘கோழைத்தனமாக’ கொலை புரிந்த; தமிழரான கணவருக்கு 9 1/2 ஆண்டு சிறை!!

Gaya Raja

வேட்பாளர்கள் தேவை! Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட விருப்பமா?

Lankathas Pathmanathan

காக்க காக்க “தெருவிழாவை” காக்க!

Lankathas Pathmanathan

Leave a Comment