பாடசாலைக்கு சுமார் 30 சதவீத ஊழியர்களும் மாணவர்களும் சமூகமளிக்காத நிலை வரும்போது மாத்திரம் COVID தொற்றின் பரவல் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என Ontario அரசாங்கம் கூறுகிறது.
பாடசாலையில் பதிவாகும் ஒவ்வொரு COVID தொற்றுகள் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படாது என Ontario மாகாண கல்வியமைச்சர் Stephen Lecce புதன்கிழமை (11) கூறினார்.
Ontarioவில் உள்ள மாணவர்கள், COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தொலைநிலைக் கற்றலைத் தொடர்ந்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை வகுப்புகளுக்குத் திரும்பவுள்ளனர்.
மீண்டும் பாடசாலை ஆரம்பித்த பின்னர், சுமார் 30 சதவீத ஊழியர்களும் மாணவர்களும் சமூகமளிக்காத நிலை வரும்போது மாத்திரம் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தொற்றின் பரவல் குறித்து தெரிவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
தங்கள் பிள்ளையின் பாடசாலையில் தொற்று பரவ கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் பாடசாலைக்கு செல்லாதோர் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவது பாதுகாப்பானதாக இருக்கும் என நம்பிக்கையில் உள்ளதாக முதல்வர் Doug Ford கூறினார்.
இந்த நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பும்போது ஒவ்வொரு மாணவருக்கும் ஊழியர்களுக்கும் இரண்டு COVID விரைவு சோதனைகளை வழங்குவதாக Ontario அரசாங்கம் அறிவித்தது.
திங்கட்கிழமை முதல் பாடசாலை வாரியங்களுக்கு 5.1 மில்லியன் விரைவு சோதனைகளை விநியோகிப்பதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, 10 மில்லியனுக்கும் அதிகமான N95 முகமூடிகள் கல்வியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.