December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

நிதி அமைச்சர் Chrystia Freeland வெளியிட்ட இலையுதிர் கால பொருளாதார அறிக்கையிலுள்ள சிறப்பம்சங்கள்:

இலையுதிர்கால பொருளாதார அறிக்கை எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மீட்சியைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆனாலும், COVID தொற்றின் Omicron திரிபினை கையாள்வது அடங்கலாக பில்லியன் கணக்கில் அதிகரித்த செலவீனங்களையும் அது கொண்டுள்ளது.

இந்த பொருளாதார அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேறு சில நடவடிக்கைகளாவன;

குடிவரவு பின்னுறுத்தல்கள் – IMMIGRATION BACKLOGS

2022-23 நிதியாண்டு முதல் குடிவரவு விண்ணப்பங்களை செயலாக்குவதில் உள்ள பெரும் பின்னுறுத்தல்களை சரிப்படுத்த 85 மில்லியன் டொலர்களை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குடிவரவு விண்ணப்பங்களை செயலாக்கும் வேகத்தை பெருந்தொற்று பாரிய அளவில் குறைத்ததாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், நெருக்கடியில் உள்ள ஆப்கானியர்களை கனடாவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் நோக்கில் பல வளங்கள் செலவிடப்பட்டன.

கனடா தனது குடிவரவு இலக்கான 401,000 நிரந்தர வதிவாளர்களை கடந்த ஆண்டில் (2021) அடைந்த போதிலும், செயலாக்கம் பெற வேண்டிய விண்ணப்பங்கள் 1.8 மில்லியன் வரை தேக்கமுற அனுமதித்ததற்காக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சித்துள்ளன.

புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் மாதாந்த சராசரி எண்ணிக்கை பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளை எட்டுவதால், குடிவரவு அதிகரித்து வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகளை மீள்குடியேற்றல் – RESETTING REFUGEES FROM AFGHANISTAN

ஆப்கானிய அகதிகளை கனடாவில் குடியமர்த்துவதற்கான செலவு நடப்பு நிதியாண்டு முதல் 6 ஆண்டுகளில் $1.3 பில்லியனாகவும், எதிர்காலத்தில் $66.6 மில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை கனடாவிற்கு அழைத்து வருவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு வருடங்கள் ஆகும் என எதிர்பார்ப்பதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவர்களில் பலர் தலிபான்களிடமிருந்து தப்பிக்கும் பெண்களாகவும் குழந்தைகளாகவும் மத மற்றும் இன சிறுபான்மையினராகவும் ஆப்கானிஸ்தானில் கனடாவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்ட பணிகளின் போது உதவியவர்களாகவும் இருப்பார்கள்.

அந்நாட்டிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் தாமதம் காட்டுவதாக அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. December 8 2021 வரை, 5,485 ஆப்கானியர்கள் மட்டுமே கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.

அந் நாட்டிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை ஆராய்வதற்கான விசேட குழுவை நிறுவுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

British Columbiaவில் இயற்கை அனர்த்தங்கள் – NATURAL DISASTERS IN B.C.

கடந்த ஆண்டின் (2021) ஆரம்பத்தில் British Columbiaவில் பிரதான உட்கட்டமைப்புகள் கனமழை காரணமாக சேதமடைந்தன. இது அரசாங்கத்தின் நிதிக் கண்ணோட்டத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு, பாறை சரிவுகள் போன்றவற்றால் மாகாணம் பாதிக்கப்பட்டது.

மாகாணத்தின் மீட்சியில் மத்திய அரசின் பங்கிற்கான ஆரம்ப மதிப்பீடுகள் $5 பில்லியன் ஆகும். அந்த செலவுகள், 2021ஆம் ஆண்டு மேற்குக் கடற்கரையை நாசப்படுத்திய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான பிற செலவுகளுடன், பேரிடர் நிதி உதவி ஏற்பாடுகளின் கீழ் வரும்.

குறிப்பாக Vancouver துறைமுகம் வழியான கனடாவின் விநியோகச் சங்கிலிகளை அனர்த்தங்கள் தடுத்துள்ளன. இதனால் பெரும் பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக இணைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்படும் வேகம், விநியோக சங்கிலிகளை சரிப்படுத்தல், பொருட்களின் விநியோக ஓட்டத்தை மாற்றியமைத்தல் போன்ற காரணிகளை பொறுத்து வெள்ளத்தின் மொத்த பொருளாதார செலவு அமையும் என அரசாங்கம் கூறியுள்ளது.

மாகாண, மத்திய அதிகாரிகள் கனடாவின் முதல் தேசிய தழுவல் உத்தியின் (National Adaptation Strategy) அடிப்படையில் பணிபுரிகின்றனர். ஆனால் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் அது முடிவடைய வாய்ப்பில்லை.

நேரடி ஆற்றுகை நிகழ்ச்சிகளுக்கான உதவி – HELP FOR LIVE PERFORMANCES

நேரடி ஆற்றுகை நிகழ்ச்சிகள் தொழில்துறைக்கு புதிய ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. நிகழ்சிகளுக்கு வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரம்புகள், கூட்டத்தை முழுவதுமாக நம்பியிருக்கும் ஒரு தொழில்துறைக்கு பெரும் பாதிப்பாக  இருந்தது.

இந்த நிலையில், நேரடி ஆற்றுகை நிகழ்ச்சிகளை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வருடங்களாக பொது சுகாதார கட்டுப்பாடுகளால் ஏற்ற இறக்கங்களுக்கு முகங்கொடுத்தமையாலும் நிதியளித்தல், உருவாக்குதல், ஒத்திகை பார்த்தல் போன்றவற்றுக்கு நேரம் எடுப்பதாலும் நேரடி ஆற்றுகை நிகழ்ச்சிகள் தொழிற்துறையின் மீட்சி ஓரளவு பின்தங்கியுள்ளது.

இதன் காரணமாக, நேரடி ஆற்றுகை தொழிற்துறையை சார்ந்துள்ள தொழிலாளர்களின் பொருளாதாரம், தொழில், தனிப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், அத்துறைக்கு தற்காலிகமாக நிதி வழங்கும் முன்மொழிவினை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இதற்காக 2022 நிதியாண்டில் $60 மில்லியன் தற்காலிக நிதியினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியை நிர்வகிப்பதற்கு Canadian Heritage கூடுதலாக $2.3 மில்லியன் நிதியைப் பெறும்.

சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான கார்பன்விலை தள்ளுபடிகள் – CARBON-PRICE REBATES FOR SMALL- AND MEDIUM-SIZED BUSINESSES

கார்பன் விலையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அதன் சொந்த கார்பன் விலைத் திட்டம் இல்லாமல் பின்னடைவான மாகாணங்களுக்குத் திருப்பித் தரும் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.

தற்போது தள்ளுபடிகள் கூட்டாட்சி கார்பன் விலையை (federal carbon price) செலுத்தும் மாகாணங்களில் உள்ள தனிப்பட்ட குடும்பங்களுக்கு அனுப்பப்படுகின்றன. சிறு வணிகங்கள் தங்களின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டின் (2022) தொடக்கத்தில் விபரங்களை அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் Alberta, Saskatchewan, Manitoba, Ontario போன்ற மாகாணங்களில் உள்ள வணிகங்களுக்கு பயனளிக்கும் திட்டத்திற்காக ஏற்கனவே $200 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

ஆசிரியர்களுக்கான வரிக்கழிவு – TAX CREDIT FOR TEACHERS

ஆசிரியர்கள் விரைவில் தங்களுக்கான வரிக்கழிவுகள் மூலம் வீட்டில் இருந்தே கல்வி கற்பதற்கான பாடசாலை உபகரணங்களைப் பெற முடியும் என்பதுடன், இந்த வரி ஆண்டில் இதை விட அதிகமான நலன்களைப் பெறுவார்கள்.

ஆசிரியர்களுக்கான திருப்பிச் செலுத்தக்கூடிய வரிக்கழிவை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக, $1,000 வரை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

வகுப்பறையிலோ அல்லது தொலைதூரக் கற்றலுக்கோ பயன்படுத்தப்பட்டாலும், ஆசிரியர்கள் தமக்கான உபகரணங்களை கோர முடியும் என்பதையும் இந்த மாற்றம் உறுதிசெய்யும்.

Graphing calculators, Digital Timers மற்றும் தொலைதூர கற்றல் கருவிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தற்போது தேவையான பொருட்களின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

விரிவாக்கப்பட்ட வரி மீள்செலுத்தலுக்கு 2021-2022 நிதியாண்டில் சுமார் $4 மில்லியனும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் $5 மில்லியனும் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரம்யா சேது

Related posts

வேட்பாளர்கள் தேவை! Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட விருப்பமா?

Lankathas Pathmanathan

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

கொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல!

Lankathas Pathmanathan

Leave a Comment