சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
COVID தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் புதன்கிழமை (15) அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது.
சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஏனைய அமைச்சர்கள், பொது சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இன்று அறிவிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகள் நான்கு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவித்த அமைச்சர், அந்த நேரத்தில் இந்த முடிவு மறு மதிப்பீடு செய்யப்படும் எனவும் கூறினார்.
COVID தொற்றின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த பெரும்பாலான அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கு எதிரான ஆலோசனைகள் கடந்த October மாதம் நீக்கப்பட்டன.
கனடாவில் Omicron திரிபின் சமூக பரிமாற்றம் தற்போது உள்ளது என நேற்று முன்தினம் தெரிவித்த கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி, அது விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்தார்.
இன்றைய நிலையில் Omicron திரிவு பரவினால் January நடுப்பகுதியில் கனடாவில் நாளாந்தம் 12 ஆயிரம் தொற்றுக்கள் வரை பதிவாகும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.