September 20 – Justin Trudeau பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பார் என்று எந்த கருத்துக் கணிப்பும் உறுதியாக கூறவில்லை. (மீண்டும்) சிறுபான்மைதான் அதிக சாத்தியமாம். ஆனால் எந்தக் கட்சி என்பதில் தான் இப்போது குழப்பம்.
தேர்தல் அரசியலில் கருத்துக் கணிப்புகளை எந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எப்போதும் உள்ளது. ஆனாலும் கருத்திக் கணிப்புகளை தவிர ஒரு பிரச்சார காலத்தை எவ்வாறு மதிப்பிடுவது?
36 நாட்கள் நீளும் 44ஆவது கனேடிய தேர்தல் பிரச்சார ஆரம்பத்தில் Trudeau பெரும்பான்மையை தங்கத் தாம்பாளத்தில் பெறுவார் என்ற நம்பிக்கை தாராளவாதிகளைத் தாண்டியும் பலருக்கும் இருந்தது. ஆனாலும் நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மாறியது – மாறுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து Trudeauவுக்கு சாதகமான நிலை இல்லை. இதற்கு பல காரணங்களைக் கூறலாம் – அவற்றில் எல்லாம் பிரதானமானது COVID பெரும் தொற்றின் மத்தியில் தேர்தல் தேவைதானா என்பதுதான். முற்கூட்டிய தோ்தல் அறிவிப்புக் குறித்து வாக்காளர்கள் மகிழ்ச்சியடையவில்லை என பெரும்பான்மையான கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
தொற்றைத் தீவிரமாக எதிர்கொள்ளும் நோக்குடன் பொதுத் தோ்தலை அறிவித்ததாக Trudeau வலியுறுத்துகின்றார். தொற்றுக்கு பிந்தைய எதிர்காலத்தை திறம்பட நிர்வகிக்க Trudeauவுக்கு பெரும்பான்மை ஆணை இருக்க வேண்டும் என கனேடியர்கள் நம்ப வேண்டும் என்பது தாராளவாதிகளின் எதிர்பார்ப்பு. தொற்றை கட்டுப்படுத்துவதில் கிடைத்த நற்பெயரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதே Trudeauவின் கணிப்பு. இதனால் தான் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாரானார்.
நாடாளுமன்றத்தில் சிறுபான்மை ஆட்சியை கொண்ட அரசாங்கங்கள் தமது ஆதரவு அதிகமாக இருக்கும் போது ஒரு தேர்தலை நடத்த எண்ணுவது வழமை. அதைத்தான் Trudeau செய்தார். கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 2019இல் நடந்த பொதுத் தேர்தலில் Trudeau பெரும்பான்மையை வெற்றி பெறவில்லை. இதனால், இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுகின்றது.
தேவையோ தேவையற்றதோ – இந்தத் தேர்தல் ஒரு வகை ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது – சில நேரங்களில் கோபத்தையும் வெளிப்படுத்துகிறது – இவை இரண்டும் பொதுவாக கனேடிய தேர்தலில் காணப்படுவதில்லை. Trudeauவும் குறிப்பாக சில தாராளவாத வேட்பாளர்களும் இம்முறை பிரச்சாரத்தின் போது எதிர்ப்புகளை எதிர்கொள்கின்றனர். இதனால் ஒருவகையில் வன்முறை நிறைந்த தேர்தலாக இதனை குறிப்பிடலாம்.
இவற்றில் பல போராட்ட நடவடிக்கைகளுக்கு கனடாவின் மக்கள் கட்சி (People’s Party of Canada – PPC) ஆதரவாளர்கள் தான் காரணம். இது போன்ற ஒரு சம்பவம் காரணமாக Ontarioவில் ஒரு தொகுதியில் மக்கள் கட்சியின் தலைவர் அவரது பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அவர் Trudeau மீது சரளைக் கற்களை வீசியதாக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
மக்கள் கட்சியின் எதிர்ப்பு தாராளவாதிகளை நோக்கியிருந்தாலும், அதன் விளைவு பழமைவாதிகளையே பாதிக்கிறது. மக்கள் கட்சி, வாக்காளர்கள் மத்தியில் ஆதரவில் உயர்வைக் காண்கிறது. அந்த ஆதரவுத் தளம் பழமைவாதிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பாவிட்டாலும் கூட பெரிய கட்சிகளின் வெற்றிக்கான சந்தர்ப்பங்களை மக்கள் கட்சி எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து இரண்டு சிந்தனைகள் உள்ளன. அதில் முதலாவது அவர்களினால் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியாது.
பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், இது பொதுவான பார்வையாக இருந்தது. அவர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால் இப்போது நிலவும் இரண்டாவது சிந்தனை என்னவென்றால், அவர்கள் பாரம்பரிய பழமைவாதிகளின் வாக்குகளைப் பிரித்தெடுக்கலாம். இது தாராளவாதிகளுக்கு சாதகமாக அமையலாம்.
இதனால் தான் Maxime Bernier அல்லது அவரது மக்கள் கட்சிக்கு வாக்களிப்பது Trudeauவை பிரதமராக்கும் வழியாகும் என்ற ரீதியில் தமது பிரச்சாரத்தை பழமைவாதிகள் முடிக்கிவிட்டுள்ளனர். அதேபோல் புதிய ஜனநாயக கட்சிக்கும் தலைவர் Jagmeet Singhக்குமான ஆதரவில் ஏற்பட்ட சரிவு, அவரது ஆதரவாளர்கள் சிலர் தாராளவாதிகள் வசம் மாறியிருக்கலாம் என்பதை குறிக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே யாருக்கு அரியாசனம் என்பதில் இழுபறி நிலையை கருத்துக் கணிப்புகள் காட்டி நிற்கின்றன.
தாராளவாதிகளின் தலைவர் Trudeauவுக்கும், பழமைவாதிகளின் தலைவர் Erin O’Tooleக்கும் இடையில் தான் போட்டி. பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் தாராளவாதிகளும் பழமைவாதிகளும் சமநிலையில் உள்ளனர். கருத்துக் கணிப்பிற்கும் வாக்குப் பதிவுக்கும் இடையில் 2 முதல் 4 சதவிகிதம் வரை மாறுபாடு இருக்கும் என்பது தான் சிக்கல்.
பழம் யார் பக்கமும் கனியலாம்.
ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த Trudeauவின் பதவிக் காலத்தை நீட்டிக்க நல்ல காரணங்கள் இருந்தாலும், அவர் மூன்றாவது முறை பிரதமராவதை எதிர்த்து வாக்களிக்கவும் வலுவான நியாயங்கள் உள்ளன.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தாராளவாதிகளுக்கு அது தோல்வி – காரணம் பெரும்பான்மையை நோக்கித் தான் இந்தத் தேர்தலை Trudeau நகர்த்தினார்.
மாறாக, தாராளவாதிகளை தோற்கடிக்காவிட்டால் அது பழமைவாதிகளுக்கு தோல்வி – காரணங்கள் பல உள்ளன.
எப்படிப் பார்த்தாலும் Trudeauவுக்கு இது இறுதித் தேர்தல் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. அவர் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலுக்குள் புதிய தலைமையிடம் கட்சியையும் நாட்டையும் கையளித்துவிட்டு அரசியலிலிருந்து வெளியேறலாம். அவர் தோல்லியடைந்தால் தேர்தல் முடிவு வெளியான மறுகண(தின)மே பதவி விலகலாம்.
இந்த தேர்தலின் முடிவுகள் வாக்காளர்கள் இந்த தேர்தலை வாக்கெடுப்பாகவா அல்லது தேர்வாகவா பார்க்கிறார்களா என்பதைப் பொறுத்தது.