Ontario மாகாணம் September வரை பாடசாலைகளை மூடி வைத்திருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.
பிராந்திய அடிப்படையில் June மாதத்தின் மீதமுள்ள வாரங்களுக்கு பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டாம் என அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் முன்னுரிமைகள் குழு திங்கட்கிழமை முடிவை எடுத்ததாக தெரியவருகின்றது. இது சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams உட்பட உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு எதிரானதாகும்.
இந்த முடிவு புதன்கிழமை பிற்பகல் திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது உறுதிப்படுத்தப்படவுள்ளது. ஆனாலும் இந்த விடயத்தில் இறுதி முடிவு குறித்து மாகாண அரசாங்கம் எப்போது ஒரு அறிவிப்பை வெளியிடும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த விடயம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார். முதல்வர் Doug Fordஉம் கல்வி அமைச்சர் Stephen Lecce உம் நிபுணர்களால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்கிறார்கள் எனவும் அமைச்சர் Elliott கூறினார்.