Ontario மாகாணம் மீளத் திறக்கும் மூன்று படி திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது.
தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை எளிதாக்க, வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து இந்த மீளத் திறக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை முதல் golf, tennis மைதானங்கள் போன்ற வெளிப்புற பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதல்வர் Doug Ford வியாழக்கிழமை இந்த மீளத் திறக்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த மூன்று அடுக்கு திட்டத்தின் முதலாவது படி June மாதம் 14ஆம் திகதி வாரத்தில் ஆரம்பிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது Ontarioவில் அமுலில் உள்ள வீட்டில் தங்குவதற்கான உத்தரவு June மாதம் 2ஆம் திகதியுடன் காலாவதியாகிறது என முதல்வர் Ford அறிவித்தார். ஆனால் அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களும் மாகாணம் முதலாம் கட்டத்தில் நுழையும் வரை மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தொற்றுக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்க ஒவ்வொரு படியிலும் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு மாகாணம் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. முதலாவது படியை அடைவதற்கு Ontarioவில் 60 சதவீதமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்ற பின்னர் குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். வியாழக்கிழமை வரை Ontarioவில் 58 சதவீதமான 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.
அதேபோல் இரண்டாவது படி அடைவதற்கு Ontarioவில் 70 சதவீதம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது தடுப்பூசியும் 20 சதவீதமான 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்ற பின்னர் குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதேவேளை மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறைக்கு திரும்ப முடியும் என தீர்மானிக்கப்படும் வரை மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் தொலைதூரக் கற்றலை தொடரும் எனவும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.