Johnson & Johnson COVID தடுப்பூசி கொள்வனவை திட்டமிட்டபடி தொடர்வதற்கு கனேடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.ஏற்கனவே கொள்வனவு செய்துள்ள மில்லியன் கணக்கான Johnson & Johnson தடுப்பூசிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
Helath கனடா, Johnson & Johnson தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் பயன்பாட்டிற்கு பயனுள்ளது எனவும் கருதும் வரை இந்தத் திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். அமெரிக்காவில் Johnson & Johnson தடுப்பூசிகளின் பயன்பாடு இடைநிறுத்தம் செய்யப்பட்ட போதிலும், கனடிய அரசாங்கம் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் ஆலோசனையை பின்பற்றும் என அமைச்சர் கூறினார்.
அமெரிக்காவில் இரத்த உறைவு பக்க விளைவு காரணமாக Johnson & Johnson தடுப்பூசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக சுகாதார அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து Health கனடா அவதானித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Health கனடா, Johnson & Johnson, AstraZeneca, Pfizer, Moderna ஆகிய தடுப்பூசிகளை பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் கருதுகின்ற நிலையில் இந்த தடுப்பூசிகளை கனடா தொடர்ந்து கொள்வனவு செய்யும் என அமைச்சர் ஆனந்த் புதன்கிழமை கூறினார். Johnson & Johnson தடுப்பூசிகளின் முதலாவது விநியோகம் இந்த மாத இறுதியில் கனடாவை வந்தடையவுள்ளது என பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.