தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

NCCTயின் அருவருக்கும் விளம்பரத் தாகமும், உரிமை கோரலும்!

February மாதம் 6ஆம் திகதி எனது முகநூலில் ஒரு பதிவை இட்டேன். அந்தப் பதிவின் தலைப்பும் இந்தப் பத்தியின் தலைப்பும் ஒன்றுதான்.அந்தப் பதிவிற்கு காரணமாக இருந்தது, இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் Torontoவில் நடைபெற்ற வாகனப் பேரணியாகும்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கனடாவில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கனடியத் தமிழர் சமூகம் – மாணவர் சமூகம் என்ற பெயரில் தான் அழைப்பு விடுக்கப்படுவது வழமை.இந்த முறையும் முதலில் நடைபெற்றது அதுதான். ஆனால் திடீரென மனம் மாறிய NCCT எனப்படும் கனேடிய தமிழர் தேசிய அவை தமது பெயரில் இந்தப் பேரணிக்கு தனியுரிமை கோரியது. இதற்கான காரணம் என்ன என்ற அடிப்படையில் எனது அந்த முகநூல் பதிவு அமைந்திருந்தது.

வாகனப் பேரணி நடைபெறுவதற்கு முதல் நாள் (சனிக்கிழமை) மாலையில்  தீடீரென இந்த நிகழ்வுக்கு  NCCT தனியுரிமை கோர முடிவு செய்தது. இதற்கான காரணம் தாயகத்தில் பெரு வெற்றிபெற்ற P2P போராட்டத்தின் பெறுபேறுகளை கனடாவில் முழுமையாக NCCT உரிமை கோரவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

இதனைவிடவும்  கனடாவில் இயங்கும் மேலும் சில அமைப்புகளுடன் கனேடியத் தமிழர் சமூகம் – மாணவர் சமூகம் என்ற பெயரில் இந்த வாகன பேரணியை நடத்த முதலில் இணங்கியிருந்த NCCT, பின்னர் தனது உரிமை கோரலுக்காக  அந்தக் கூட்டமைப்பில் இருந்து விலகி வந்தது பொது வெளியில் சுட்டிக்கட்டப்பட்டதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டது(படுகின்றது).P2P உரிமை பேரணி தாயகத்திலும் – புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் ஆதரவை பெற்றுவிட்டது  என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு – அந்த வெற்றியில் குளிர்காய NCCT முனைகின்றது என்று தான் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.

இதுவரை ஒரு இரவு விருந்து தவிர, அனைத்து வகை மக்கள் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும்  கனேடியத் தமிழர் சமூகம் – மாணவர் சமூகம் என அநாமதேயமாக விடுக்கப்படும் அழைப்புகள் – P2P விடயத்தில் மாத்திரம் NCCT என மாறியது ஏன்? என்ற கேள்விக்கு பொது வெளியில் பதில் கூற வேண்டிய கடப்பாடு கனடிய தமிழர் தேசிய அவைக்கு உள்ளது.இது தவிரவும் அண்மையில் கனடாவில் வேறு அமைப்புகளாலும் தனிநபர் முயற்சிகளாலும் சாத்தியமான இரண்டு திட்டங்களில் NCCT தன்னை நுழைத்துக் கொண்டு – உரிமை கோர முனைவது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

அவற்றில் முதலாவது  – Brampton நகரில் அமையவுள்ள தமிழினப் படுகொலை நினைவுத் தூபிக்கான பெயர் மாற்றம் என்ற சாக்குப்போக்குடன் நகர முதல்வர் Patrick Brown ஊடாக தன்னை இந்த திட்டத்தில் உள் நுழைக்க முனைகின்றது NCCT. இந்த நினைவுத் தூபி அமைப்பு Brampton நகரிலிருக்கும் தமிழர் குழு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி என்பதை இங்கே பதிவது அவசியம்.இரண்டாவது விடயம்  – Markham நகரில் அமைக்க கலந்துரையாடப்படும் நினைவுத்தூபி விடயத்திலும் NCCT இடைநடுவில் புகுந்து தனது ஆதிக்கத்தை செலுத்த முனைவதாக விமர்சிக்கப்படுகின்றது.

உண்மையில் NCCT முன்னெடுத்த அண்மைய பல நகர்வுகளில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியுள்ளது. இவற்றில் இருந்து தம்மை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் NCCT முனைகின்றது என்பதைத் தான் இந்தத் தொடர் உரிமை கோரல்கள் சுட்டிக் காட்டுகின்றன. 

இலங்கதாஸ் பத்மநாதன்

தேசியம் February 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை

Related posts

ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்: நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை!

Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்

Gaya Raja

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

Leave a Comment