கனடாவில் மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் தொடர்பான மேன் முறையீட்டை விசாரணை செய்வதில்லை என கனடிய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. Sun Sea கப்பலுடன் தொடர்புடைய மூவர் குறித்த மேன் முறையீட்டு விசாரணை விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழ் அகதிக் கோரிக்கையாளர்கள் கனடாவை வந்தடைந்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட லெஸ்லி இம்மானு வேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர் நாயகம் ராஜரத்தினம் ஆகிய தமிழர்கள் தொடர்பான மேன் முறையீட்டை விசாரணை செய்யப் போவதில்லை என கனடிய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்கள் மீது கனடாவின் புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய மனித கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
Sun Sea கப்பலின் தலைவராக இருந்ததாக லெஸ்லி இம்மானுவேல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அதனை அவர் மறுத்திருந்தார். தான் ஒரு பயணியாக கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக சாட்சியமளித்த அவர் பின்னர் கப்பலுக்கு ஏற்பட்ட பேரழிவைத் தவிர்க்க கப்பலின் தலைமையேற்க வேண்டிய நிலை தோன்றியதாக கூறினார்.
இந்தக் கப்பலில் பயணிக்காத கனடிய குடி மக்களான நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர் நாயகம் ராஜரத்தினம் ஆகியோர் மீது கப்பல் பயணத்தை ஒழுங்கமைக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனாலும் தங்கள் மீதான குற்றச் சாட்டுகளின் சான்றுகள் குறைபாடுடையவை என அவர்கள் வாதிட்டனர்.
இந்த மூவரும் 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் British Colombia மாகாணத்தின் உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த June மாதம் மீண்டும் British Colombia மாகாணத்தின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்புகளை உறுதி செய்தது. தற்போது மேன் முறையீட்டை விசாரணை செய்வதில்லை என முடிவு செய்துள்ள கனடிய உச்ச நீதிமன்றம் அதற்கான எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
Sun Sea என்ற கப்பலில் 492 இலங்கைத் தமிழர்கள் கனடாவை வந்தடைந்து 10 வருடங்கள் ஆகின்றது. ஆனாலும் அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் சட்டச் சிக்கல்கள் முழுமையாக முடிவடையவில்லை. அந்த நிலையில் கனடிய உச்ச நீதிமன்றம் January மாதத்தின் இறுதியில் வெளியிட்ட இந்த மேன்முறையீட்டு விசாரணை முடிவு தொடர்ந்தும் சட்டச் சிக்கல்களை எதிர் கொள்பவர்களுக்கு பெரிய ஆறுதலாக அமையலாம் என்பது பலரது நம்பிக்கையாகும்.
பத்மன்பத்மநாதன்