அமெரிக்க தேர்தல் முடிவில் ஜனநாயகம் ‘எளிதாக’ தப்பிக்கும் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (05) அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மிக கடுமையான போட்டியாக கருதப்படும் இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் Donald Trump, ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் Kamala Harris ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதன்கிழமை (06) இறுதிக்குள் இந்த தேர்தலின் தெளிவான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தத் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், அமெரிக்கா உலகின் மிக நீடித்த ஜனநாயக நாடாக தொடர்ந்து இருக்கும் என தான் உறுதியாக நம்புவதாக கனடாவுக்கான அமெரிக்க தூதர் David Cohen கூறினார்.
அமெரிக்கா முழுவதிலும் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கனடியர்களை பொறுமையாக இருக்குமாறு அவர் கோரினார்.
அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக உறவை இந்த தேர்தல் எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக உறவை தேர்தல் எவ்வாறு பாதிக்கும் என்பதை தீர்மானிப்பது கடினம் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் David Cohen கூறினார்.
“ஜனாதிபதியாக அமெரிக்க மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது” என சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng கூறினார்.