லெபனானில் இருந்து கனடியர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் தயார் நிலையில் கனடிய படையினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனான் நெருக்கடிக்கு மத்தியில் தமது தயார் படுத்தல்களை கனடிய ஆயுதப் படைகள் அண்மைய நாட்களில் மாற்றிக் கொள்கின்றன.
அரசாங்கத்திற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக அந்தப் பிராந்தியத்தில் தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையை கனடிய இராணுவம் முன்னெடுக்கிறது.
அங்கிருந்து கனடிய குடிமக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டால் அதற்கு உதவும் வகையில் கனடிய படையினரின் நகர்வுகள் வடிவமைக்கப்படுகிறது.
இந்த விடயத்தில் கனடிய ஆயுதப் படைகள் பல மாதங்களாக திட்டம் ஒன்றை தயார் படுத்தி வைத்திருந்ததாக தெரியவருகிறது.
ஆனாலும் லெபனானில் அதிகரித்து வரும் பதட்டத்தின் மத்தியில், 48 மணி நேர அவகாசத்தில் கனடிய ஆயுதப் படைகள் கனடாவை விட்டு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உத்தரவு புதன்கிழமை (25) இரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நிகழ்ந்த தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் உட்பட லெபனானில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக 21 நாள் யுத்த நிறுத்தத்துக்கு கனடாவும் நட்பு நாடுகள் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தன.
லெபனானுக்கு எதிரான இஸ்ரேல் வன்முறைகளை நிறுத்துமாறு பிரதமர் Justin Trudeau அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.