December 12, 2024
தேசியம்
இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

கனடிய தமிழரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்?

கனடிய தமிழர்கள் இலங்கையில்  நிரந்தர வதிவிட உரிமை பெறக்கூடிய புதிய சாத்தியக்கூறு ஒன்று தோன்றியுள்ளது. இதன் மூலம் கனடிய தமிழர்கள் மாத்திரமல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை வம்சாவளியினர், அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை சாத்தியமாகிறது. இலங்கை பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் வெளியிட்ட புதிய வர்த்தமானியில் இது குறித்த தகவல் வெளியானது.

புலம்பெயர்ந்தோர் சட்டம் என்ற வரையறைக்குள், 2024இன் நிரந்தர வதிவிட விசா விதிமுறைகள் – Permanent Residence Visa Regulations of 2024 – என அழைக்கப்படும் இந்த நடைமுறை இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவித்தல் பின்னணியில் கனடிய தமிழர் ஒருவரின் எண்ணக்கரு உள்ளது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

—-
புதிய சட்டம் என்ன?

இலங்கை வம்சாவளியினர், அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் இனிவரும் காலத்தில் இலங்கையில் நிரந்தர குடியிருப்பு பெறலாம். அவர்களின் குழந்தைகளுக்கும் வதிவிட உரிமை வழங்கப்படும். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் என்பதன் வரைவிலக்கணம், அவரது பெற்றோர், தாத்தா அல்லது பூட்டன் இலங்கையில் பிறந்தவர்கள் அல்லது இலங்கையின் குடிமக்களாக இருக்க வேண்டும்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அல்லது இலங்கை குடியுரிமை சட்டத்தின் பிரிவுகள் 19, 20 அல்லது 21 இன் கீழ் இலங்கையின் குடியுரிமை இழந்தவர், வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர் புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவராகின்றனர். வெளிநாட்டு வாழ்க்கை துணைவர் திருமணமாகி ஆறு மாதங்களுக்குப் பின்னர் விண்ணப்பிக்க தகுதி பெறுவார். தவிரவும், 5 ஆண்டுகளுக்குள் விவாகரத்து பெற்றுக் கொண்டால், அவரது  நிரந்தர வதிவுரிமை தானாகவே இரத்து செய்யப்படும்.

இதற்கான கட்டணத் தொகை USD $1,000. குழந்தைகளுக்கான கட்டணம் USD $400.

இலங்கையின் நிரந்தர வதிவிட உரிமை பெறுவது அங்கு தொழில் புரிய, வணிகங்களை நடத்த, சொத்துக்களை வாங்க அல்லது சொத்துக்களுக்கு வாரிசாக அனுமதிக்கிறது.

முன்னார் இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் வாழ்ந்து வரும் சில நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் நிரந்தர வதிவிட உரிமை பல நாடுகளால் வழங்கப்படுகிறது.

கனடிய தமிழர் எண்ணம்!

கந்தையா திட்டத்தின் பிதாமகன்!

2022 ஆம் ஆண்டு “கந்தையா திட்டம்” என்ற இலங்கைக்கான கனவு திட்டத்தை கனடியத்  தமிழர் சிவமணி கந்தையா உருவாக்கினார். இலங்கையை மீட்கும் இந்தத் திட்டம், இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடமும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமும் October 2022இல் கையளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிரந்தர வதிவிட உரிமை வழிமுறை முன்மொழியப்பட்டு இருந்தது. அந்த முன்மொழிவை அடிப்படையாக கொண்டு தனது புதிய விதிமுறையை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது – ஆனாலும் என்ன வழமைபோல அதன் எண்ணக்கருவை வழங்கிய தமிழருக்கு அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

கந்தையை திட்டத்தில் இரட்டைக் குடியுரிமை என்ற பிரிவின் கீழ் இப்போது அறிவிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அனுமதி குறித்த அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது திட்டம் இலங்கையில் குறைந்து வரும் தமிழர்களின் மக்கள் தொகையை கணிசமான அளவு அதிகரிக்க உதவும் என சிவமணி கந்தையா உறுதியாக நம்புகிறார். அந்த மக்கள் தொகை அதிகரிப்பு அரசியல் உட்பட பல நன்மைகளை தமிழர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பெற்றுத் தரும் என்பது அவரது கருத்தாகும்.

ஆனாலும் என்ன; இலங்கையில் நிரந்தர வதிவிட உரிமை பெறக்கூடிய சாத்தியக்கூறு ஒருபுறம் இருந்தாலும் – அரசாங்கத்தின் குடியேற்றம் குறித்த ஒரு முக்கிய அறிவித்தலின் கருவாக இருக்கும் எண்ணக் கருவை வழங்கியர் தமிழர் என்பதற்காக அவருக்கு அந்த அங்கீகாரத்தை கூட வழங்க மறுக்கும் ஒரு அரசியல் கலாச்சாரம் கொண்ட நாட்டில், நிரந்தர வதிவிட உரிமையை மீளப்பெறுவது தமிழர்களுக்கு நன்மைகளை  பெற்றுத் தரும் என நம்புவது அதிக எதிர்பார்ப்பு என்பது எனது கேள்வியாக மாத்திரம் இருக்காது!

“தொடர்ச்சியான கேள்விகளும், சாணக்கியமான அணுகுமுறையும் தான் இலங்கையின் ஆட்சியாளர்களை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் இழுத்துவரும்” என்கிறார் சிவமணி கந்தையா.

—–

கந்தையா திட்டம்

இரட்டை குடியுரிமை குறித்து கந்தையா திட்டம் பின்வருமாறு கூறுகிறது:

இலங்கையின் அதிகார வரம்பின் படி, இலங்கையில் பிறந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அந்தந்த இலங்கைத் தூதரகங்களில் தங்கள் பிறப்பை பதிவு செய்துள்ள இலங்கையின் பெற்றோருக்கு பிறந்த வெளிநாட்டுப் பிள்ளைகள் இலங்கையின் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

எவ்வாறாயினும், இலங்கையின் இரட்டைக் குடியுரிமைக்கான மேற்படி நடைமுறையை புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மேற்கொள்வதை 30 வருட கால உள்நாட்டுப் போர் தடுத்துள்ளது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்கள் அந்தந்த நாட்டில் குடியுரிமை பெற்ற பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், அவர்களின் அல்லது குழந்தைகளின் இலங்கை குடியுரிமையை பேணுவதற்காக புலம்பெயர் நாடுகளில் இலங்கை தூதரகத்துடன் அவர்கள் எந்தவிதமான தொடர்பையும் பேணவில்லை.

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையின் இரட்டை குடியுரிமையில் ஆர்வமாக உள்ளதுடன், இலங்கையில் சொத்துக்கள் மற்றும் வணிகங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி அவர்கள் தாங்கள் பிறந்த நாட்டிற்கு கைமாறு செய்யவும் அதன் நேர்மறையான வளர்ச்சியில் பங்காளர்களாக செயற்படவும் விரும்புகிறார்கள்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள இலங்கை சட்டம் காரணமாக வெளிநாட்டுக் குடியுரிமையோடு இருந்த பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உரிமத்தை இழந்துள்ளனர். இதனால் தங்களது பிள்ளைகளுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்காதோ என்ற எண்ணப் பாட்டை புலம் பெயர்ந்தோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் உள்ள தங்களுடைய சொத்துகளையும் செல்வத்தையும் தங்கள் பிள்ளைகளுக்கு மாற்றுவதை அவர்கள் பாதுகாப்பற்றதாக கருதுகிறார்கள்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்லாம் என சட்டமூலங்கள்  திருத்தப்பட்டால், இரண்டாம் தலைமுறையினரும் தங்கள் பெற்றோருடன் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக மாற்றும். இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் இரண்டாம் தலைமுறையில் பெரும்பான்மையினரை இலங்கைக்கு வந்து தங்கள் வேர்களைக் கண்டறிய ஊக்குவிக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதன் மூலம் அவர்களிடம் இருந்து  வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் அரச துறைகளில் புதிய மாற்றங்களை எவ்வாறு இலங்கையிலும் உட்புகுத்தலாம் என தெரிந்து கொள்ள முடியும்.  இலங்கையில் அவர்கள் பணிபுரியும் வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும்.

தற்போது இலங்கையின் குடிவரவுச் சட்டத்தில் மாற்றங்கள் செய்து மேலதிக கட்டண வசீலுப்புடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறைக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்குவதனால் இலங்கை தனக்கான மனிதவளத்தைப் பெருக்குவதுடன் டொலர்களில் வருமானம் ஈட்டும் ஒரு வணிகமாகவும் இரண்டாம் தலைமுறை இரட்டைக் குடியுரிமை வழங்கலைப் பார்க்கலாம்.

தாய்நாட்டில் முதலீடு செய்வது ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் பெருமையையும் சிறப்புரிமையையும் வழங்கும். மேலும், தமது பிள்ளைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டால், அவர்களின் சொத்துகள் அல்லது வணிக பரிமாற்ற உரிமைகளில் பெற்றோர்களுக்கு தெளிவு பிறந்து நிச்சயமற்ற தன்மையும் தேவையற்ற அச்சங்களும் நீக்கப்படும்.

—–

அடுத்த அறிவித்தல்?

கந்தையா திட்டத்தில் இருந்து முன்னரும் சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

2022 வரவு செலவுத் திட்டத்தில் மின்னணு கட்டணம் – electronic payment – செலுத்துவதற்கான முக்கியத்துவத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

2023 இல் HST அறிவிக்கப்பட்டது.

இப்போது 2024 இல் அரசாங்கம் அனைத்து இலங்கையர்களுக்கும் PR அட்டையை அறிவித்துள்ளது.

“இலங்கை மீது காதல் கொண்டு கந்தையா திட்டத்தை தயாரித்துக் கொடுக்கவில்லை” என்னும் சிவமணி கந்தையா, எமது மக்களுக்கான நன்மைகள் நிகழ வேண்டும் என்ற பிரதான நோக்கங்களோடும் அழுத்தங்களோடும் இந்தத் திட்டத்தைக் கையளித்தாக கூறுகிறார்.

இவை மாத்திரம் கந்தையா திட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் முன் நகர்த்த எண்ணியுள்ள விடயங்கள் இல்லை.

விரைவில் ஒரு புதிய அடையாள அட்டை நடைமுறையை இலங்கை அறிவிக்கலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இது போன்ற ஒரு முன்மொழிவை கந்தையா திட்டம் “One Card” என்ற பெயரில் பரிந்துரைத்திருந்தது.

One Card மூலம் கனடிய தமிழர் எண்ணத்திற்கு இலங்கை வடிவம் கொடுக்குமா?

 

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

இலங்கையில் இனப் படுகொலை! முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் நேரடிச்சாட்சி. . .

thesiyam

தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம் – வென்றது யார்?

Gaya Raja

2021 கனேடிய தேர்தல்: சமூக ஊடகங்களின் ஆதிக்கம்!

Gaya Raja

Leave a Comment