தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

மரபுத் திங்களும் …… மாமிசப் பொங்கலும்  ……

கனடாவில் இம்முறை நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள் சிலவற்றில் மாமிச உணவு விருந்தினருக்கு பரிமாற்றப்பட்டது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இது குறித்த சமூக வலைதள பதிவுகளில் பிரதானமாக விமர்சனத்திற்கு உள்ளானது இரண்டு நிகழ்வுகள்.

1) பொங்கல் Fest (Arya Canada Inc/ Mr.Tamil Canada)

2) பொங்கல் விழா (CTC)

இதில் பொங்கல் Fest ஒரு தனிப்பட்ட களியாட்ட இசை நிகழ்வு. இது அடுத்த வருடம் நடைபெறாமல் போகலாம். மாறாக கனடிய தமிழர் பேரவையின் பொங்கல் விழா ஒரு பொது அமைப்பின் வருடாந்த (இம்முறை 13ஆவது ஆண்டாக நடைபெற்றது) நிகழ்வு. CTC ஒரு உறுப்பினர் அமைப்பாக இருந்தாலும் கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பின் நகர்வுகள் விமர்சனத்திற்கு உள்ளாவது வழமையே.

பொங்கல் நிகழ்வில் மாமிச உணவு விருந்தினருக்கு பரிமாற்றப்பட்டது குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்னர் இதே பத்தியாளர் இது குறித்த விமர்சனத்தை பல்வேறு தளங்களிலும் முன் வைத்திருந்தார். அப்போதெல்லாம் பொங்கல் நிகழ்வில் மாமிச உணவின் பரிமாற்றத்தை அவசியம் என இதே பத்தியாளரிடம் நியாயப்படுத்தியவர்கள்; இன்று அதனை விமர்சிப்பதுதான் இதுவரை காலத்தில் நிகழ்ந்த ஒரே மாற்றம் எனலாம்.

ஆனால் இந்த விமர்சனம் மாமிச உணவு பரிமாற்றத்தையும் தாண்டியது. தமிழர்கள் நிகழ்வுகளில் தமிழர்களின் உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்பது பலரது அடிப்படை எதிர்பார்ப்பு.  குறிப்பாக தமிழர் மரபுரிமை மாதத்தின் பெயரால் நடைபெறும் நிகழ்வில் ஏன் தமிழர் உணவு பரிமாறப்படுவதில்லை என்ற கேள்வி உள்ளது. தமிழர் மரபுரிமையில் தமிழர்களின் உணவு முறையும் அடங்கும் தானே!

தமிழர் மரபுரிமை மாதத்தில் நடைபெறும் தமிழர் அமைப்பொன்றின் தமிழர் நிகழ்வொன்றில் தமிழர் உணவு வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்றும் தவறல்ல. மாறாக இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கும் வேற்று இனத்தவர்களுக்கு தமிழர்களின் உணவு முறையை அறிமுகப்படுத்துவது தமிழர் மரபுரிமை மாதத்தில் அவசியமான ஒன்றாகும். இது தமிழர்களின் உணவு முறையை ஏனையவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்கு சிறந்த ஒரு தருணமாகும். இந்த கேள்வி கனடிய தமிழர் பேரவையிடம் சமீபத்தில் முன்வைக்கப்பட்ட போது, நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் தமது நிகழ்வு ஒழுங்கில் தமிழர்களின் உணவு பரிமாறப்படுவது கடினமானது என கூறப்பட்டது.

ஆனாலும் என்ன January மாதத்தில் முன்னெடுக்கப்படும் பொங்கல் நிகழ்வுகளில் மாமிச உணவுப் பரிமாற்றம் குறித்த விமர்சனத்தின் ஆயுட்காலம் January மாதத்தின் முடிவுவரைதான் என்பதை இதனுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் அறிவர். அதுதான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும்.

May மாதத்தின் முடிவுவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை துயரில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர் சமூகம் June மாதம் வரவே கோடைத் திருவிழாக்களில் குதூகலிப்பதைப் போல; November மாதத்தின் மாவீரர் வார நினைவுகளை December மாதத்தின் ஆரம்பத்தில் நத்தார்/புதுவருடக் கொண்டாட்டத்தில் தொலைப்பதைப் போலத்தான் இந்த January மாத பொங்கல் மாமிச உணவு விடயமும். February வந்தால் காதலர் தின களியாட்டத்தில் இதுவும் ம(றை)றந்து போகும்.

இதுவே எமது சாபக்கேடு!

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்

Gaya Raja

அடுத்த தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைக்கும் வரவு செலவுத் திட்டம்!

Gaya Raja

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

Leave a Comment