அவசரத் தேர்தல் ஒன்று Ontarioவில் அரங்கேறுகிறது.
Justin Trudeau ஆட்சியில் இருக்கும்போது, Doug Fordக்கு ஒரு தேர்தல் தேவைப்படுகிறது. இந்த யதார்த்தத்தை அறிந்த முதல்வர் அவசர தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து, அதில் வெற்றியும் காண போகின்றார். இந்தத் தேர்தல் தேவையற்றது. ஆனாலும் தேவையானதாக உருவமைக்கப்பட்டுள்ளது. Donald Trumpபை காரணம் காட்டி இந்தத் தேர்தலை நியாயப்படுத்த Doug Ford முனைந்தார். அதில் அவர் வெற்றி கண்டாரோ இல்லையோ, அவர் மீண்டும் முதல்வராக உள்ளார்.
பலமற்ற எதிர்க்கட்சிகள், அறிமுகமில்லாத கட்சித் தலைவர்கள் என Doug Fordக்கு திரும்பும் திசை எல்லாம் சுக்கிர திசை. இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவருக்கு ஆட்சி கிடைக்கவுள்ளது.
தனது வெற்றியை உறுதிப்படுத்த அவர் தெற்காசிய அரசியலை ஓட்டி கையில் எடுத்த ஆயுதம் தான் $200 வரிச்சலுகை – tax rebate – காசோலை. இது ஒரு வகை கையூட்டு எனலாம். இந்தத் தொகை Ontario வாசிகளின் கைகளில் சென்றடையும் போது, அவர்கள் வாக்கு சாவடிக்கு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் திகதியை அறிவித்து – தன்னை ஒரு பழுத்த அரசியல்வாதி என நிரூபித்துள்ளார்.
Ontario வாசிகள் தமது வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் வழங்கப்படும் இந்த வரிச் சலுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், பலர் இன்னமும் தங்கள் காசோலைகளுக்கு காத்திருக்கின்றனர் என்பது தான் யதார்த்தம். இந்த காசோலைகள் போலவே Ontario வாக்காளர்களில் கணிசமானவர்களுக்கு தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் வரை வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறவில்லை. இவையெல்லாம் அரங்கேறுவது ஒரு அவசர தேர்தல் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
PC அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாகவே ஒரு தேர்தலை நடத்துவதற்கான தங்கள் ஆர்வத்தை வெளிக்காட்டி வந்தனர். அடுத்த தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் பெரும்பான்மை அரசாங்கத்தை Doug Ford வெற்றி கண்டார். எனவே, அமெரிக்காவின் இறக்குமதி வரி தாக்கத்தை எதிர்கொண்டு Ontarioவின் நலன்களுக்காக போராடுவதற்காக ஒரு “புதிய மக்கள் ஆணை” தேவை என்ற வாதம் அர்த்தமற்றது. RCMP முன்னெடுத்து வரும் Greenbelt அபிவிருத்தி அனுமதி விசாரணையை முடிப்பதற்கு முன்பாக மேலும் நான்கு ஆண்டுகள் பதவியை உறுதிப்படுத்திக்கொள்ள முதல்வர் Doug Ford விரும்புகிறார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
Ontario வாக்காளர்கள் தமது பொதுச் சேவைகளை பொது உடமையாக வைத்திருக்க விரும்புகிறார்கள் என்ற அரகூறல் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. Doug Ford அரசு, நிதி குறைப்பு ஊடாக பொதுச் சேவைகளை செயலிழக்கச் செய்து வருகிறது. இறுதியில் செயல் திறன் அற்ற பொது சேவைகள் தனியார் மயப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
விரைவில் கனடாவில் ஒரு பொது தேர்தல் நடைபெறும் என்பதும் அதில் Pierre Poilievre வெற்றி கொள்வார் என்பதும் பரவலான எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் Conservative தனது கடுமையான நிதிக் கொள்கையை கடைப்பிடித்தால், அது Doug Ford அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கும். அந்த சவால் Doug Fordக்கு வாக்கு அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தும்.
இவை அனைத்தையும் அறியாதவரல்ல Doug போர்ட். அதனால அவர் $200 அவசரத் தேர்தலுக்கு முந்திவிட்டார் – அதில் வெற்றியும் பெறுவார்.