80 பேருடன் பயணித்த விமானம் Pearson விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் Delta விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை (17) பிற்பகல் 2:15 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் அமெரிக்காவின் Minneapolis/St. Paulலில் இருந்து Pearson பயணித்த Endeavor விமானம் 4819 சேதமடைந்தது.
இந்த விபத்தை தொடர்ந்து Pearson விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் சில மணி நேரம் தடைப்பட்டன.
ஆனாலும் விமான சேவைகள் மாலை 5 மணிக்கு மீண்டும் வழமைக்கு திரும்பியதாக Toronto பெரும்பாக விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியது.
இந்த விபத்தில் “உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஒப்பீட்டளவில் சிறிய காயங்கள் மாத்திரம் ஏற்பட்டது எனவும் ” Toronto பெரும்பாக விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி Deborah Flint கூறினார்.
காயமடைந்தவர்களில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்ததாக Ornge அவசர விமான உதவி சேவை ஆரம்பத்தில் கூறியது .
ஆனாலும் எந்த ஒரு கடுமையான காயங்கள் குறித்து அறியவில்லை என திங்கள் இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானத்தில் 22 கனடியர்கள் உட்பட 80 பேர் பயணித்தனர்.
இவர்களில் நான்கு விமான பணியாளர்கள் அடங்குகின்றனர்.
Pearson விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் விமான பயண தாமதங்கள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்த விசாரணைக்கு பொறுப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து காரணமாக Toronto பயணிக்கும் விமானங்களில் தாமதத்தை எதிர்பார்க்குமாறு Montreal, Winnipeg விமான நிலையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Toronto பயணிக்கும் பல விமானங்கள் Ottawa சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த விமான விபத்து குறித்த விபரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து “மிகவும் கவலை” கொண்டிருப்பதாக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்துள்ளார்.
விமான விபத்தை தொடர்ந்து உதவிகளை வழங்க மாகாண அதிகாரிகள் Pearson விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக Ontario முதல்வர் Doug Ford தெரிவித்துள்ளார்.
இதில் சிக்கியவர்களுக்கு உதவிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த Ontario Liberal கட்சித் தலைவர் Bonnie Crombie அனைவரும் “விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய” வேண்டினார்.
விமான விபத்தின் பின்னர் அனைத்து பயணிகளும், பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன் என Toronto நகர முதல்வர் Olivia Chow கூறினார்.