Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தாலும் தபால் விநியோகம் இயல்புக்கு திரும்ப சில காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வாரங்கள் தொடர்ந்த வேலை நிறுத்தத்தின் பின்னர் Canada Post ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (17) மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் விநியோகங்களை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப சில காலம் எடுக்கலாம் என Canada Post பேச்சாளர் John Hamilton தெரிவித்தார்.
Canada Post ஊழியர்களை அவர்களின் தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ் வேலைக்குத் திரும்ப கனடிய தொழில்துறை உறவுகள் வாரியம் வார இறுதியில் உத்தரவிட்டது.
Canada Post நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையில் இருப்பதாக தீர்மானித்த நிலையில் இந்த முடிவை கனடிய தொழில்துறை உறவுகள் வாரியம் எடுத்தது.
மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள கனடிய தபால் ஊழியர் சங்கம், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.