Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் சமூக மையக் குழு இந்த தகவலை வெளியிட்டது.
தமிழ் சமூக மையக் குழுவின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16) நடைபெற்றது.
புதிய தகவல்களை வழங்குவதற்காகவும், புதிய திட்ட வடிவமைப்புகள், சமீபத்திய கட்டுமான காலக்கெடு, நிதி திரட்டும் திட்டங்கள் குறித்த சமூகத்தின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்கும் இந்த பொதுக் கூட்டத்தை தமிழ் சமூக மையக் குழு நடத்தியிருந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் சமூக மையத்தை கட்டி முடிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சிகள், கட்டுமான அனுமதிகளை அடைவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2027ஆம் ஆண்டில் தமிழ் சமூக மையத்தை திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அங்கு கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் தமிழ் சமூக மையக் குழுவினால் பதில் வழங்கப்பட்டது.
65 மில்லியன் டொலர் மதிப்பிலான தமிழ்ச் சமூக மையமாக இது அமைகிறது.
கனடாவில் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைப்பதற்கான செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதியை மத்திய, மாகாண அரசுகள் வழங்கியுள்ளன.
மீதமுள்ள 39 மில்லியன் டொலர்கள் தமிழ் சமூகத்தால் திரட்டப்பட வேண்டியுள்ளது.
Toronto நகர சபை 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான காணியை தமிழ்ச் சமூக மைய செயற்றிட்டத்திற்கான நீண்டகாலக் குத்தகையாக வருடமொன்றுக்கு 1 டொலர், அதற்கான வரி என்ற அடிப்படையில் வழங்கியுள்ளது.
311 Staines வீதியில் அமைந்துள்ள நிலத்தில் இந்த தமிழ் சமூக மையம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.