கனடிய தமிழர் பேரவை – CTC – அலுவலகம் மீதான தாக்குதலை கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கனடா த.தே.கூ. – கண்டிக்கிறது.
இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் கனடா த.தே.கூ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த கோழைத்தனமான தாக்குதலை நிகழ்த்தியதாக கனடா த.தே.கூ. அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
கருத்து வேறுபாடுகளை தீர்க்க வன்முறையில் நம்பிக்கை கொண்ட தீவிரவாத போக்குடையவர்கள் இந்த தாக்குதலை முன்னெடுத்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான கண்டன அறிக்கை
சித்திரவதை, வன்முறை, மரண அச்சுறுத்தலில் இருந்து இலங்கையை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஜனநாயக நாடான கனடாவில் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடும் துரோகச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த தீவிரவாத போக்குடையவர்கள் தமிழர்களை அச்சுறுத்தல், மிரட்டல், துன்புறுத்தல் மூலம் கட்டுப்படுத்த முயல்வதாக கனடா த.தே.கூ. குற்றம் சாட்டுகிறது.
2021இல் கனடா த.தே.கூ. முன்னெடுத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் M.A. சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்து கொண்ட கூட்டத்தை சீர்குலைத்த விடுதலை புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இப்போது CTC அலுவலகத்தை உடைத்து தீ வைத்து தாக்குதல் நடத்தியது என ஊகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.