முறையான குடியேற்ற நடைமுறையின் அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்துகின்றார்.
கடந்த வாரம் Akwesasneவின் Mohawk பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு புலம்பெயர்ந்தோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பிரதமரின் இந்த கருத்து திங்கட்கிழமை (03) வெளியானது.
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச St. Lawrence கடற்பரப்பில் இருந்து எட்டு உடல்கள் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக RCMP கூறியது.
இந்த நிலையில் கனடா முன்னெப்போதும் இல்லாத அளவில், அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதாக பிரதமர் Justin Trudeau திங்களன்று கூறினார்.
ஆனாலும் அவர்களின் வரவு பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என பிரதமர் வலியுறுத்துகின்றார்.
இந்த மரணங்களை பெரும் சோகம் எனவும் பிரதமர் Justin Trudeau குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் Quebec மாகாணத்தின் Roxham வீதி எல்லை மூடப்பட்டதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்புகள் இல்லை என புலனாய்வாளர்கள் ஏற்கனவே அறிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுக்கும் கனேடிய பிரதமர் Justin Trudeauவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, New York, Quebec இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நுழைவுப் புள்ளியான Roxham வீதி எல்லை கடந்த மாதம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது .