பல்லாயிரக்கணக்கான பாடசாலை ஆதரவுத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கிறது.
தமது எதிர்ப்பு நடவடிக்கை நாளின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பாடசாலை ஆதரவு ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என CUPE Ontarioவின் தலைவர் உறுதியளித்தார்.
ஆனாலும் திட்டமிட்ட வேலை நிறுத்த நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமையும் தொடருமா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக Ontario கல்வி அமைச்சர் Stephen Lecce , கனடிய பொது ஊழியர் சங்கத்தின் எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் தடுக்கும் சட்டமூலம் ஒன்றை திங்கட்கிழமை (31) பிற்பகல் மாகாண சபையில் சமர்ப்பித்தார்.
இந்த சட்டமூலம் தொழிற்சங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சுமார் 55 ஆயிரம் உறுப்பினர்கள் மீது புதிய நான்கு ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தை திணிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க அது அனுமதிக்கும்.
தனிநபர்களுக்கு எதிரான அபராதம் 4 ஆயிரம் டொலர்களாக இருப்பினும் தொழிற்சங்கத்திற்கு எதிராக 500 ஆயிரம் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.